‘ஜனாஸாக்களை நான்கு துண்டுகளாக வெட்டிப் புதைத்தனர்’ – ரொஹிங்கிய முஸ்லிம்களின் மனதை உலுக்கும் திகில் அனுபவம்


மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற அட்டுழியங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையினைத் தொடர்ந்து புகைப்பட ஊடகவியலாளரான அலிசன் ஜொயிஸ் பங்களாதேஷிக்கு தப்பி வந்துள்ள றொஹிங்கிய அகதிகளிடமிருந்து விபரங்களை கேட்டபோது அவர்களது திகில் நிறைந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.


பயங்கர அனுபவத்திலிருந்து இன்னும் விடுபட முடியாதிருப்பவர் ஹசீனா பேகம். அவர் தனது வீட்டிலிருந்து தப்பியோடும்போது கண்ட குரூரமான காட்சிகளை விபரித்தார். மேற்கு மியன்மாரின் றாக்ஹினி மாநிலத்தில் பூரா ஷிடா பரா என்ற கிராமம் தாக்கப்பட்டபோது கொல்லப்பட்ட றொஹிங்கிய ஆண்களின் ஜனாஸாக்கள் எவ்வாறு மியன்மார் இராணுவத்தினரால் நான்கு துண்டங்களாக வெட்டப்பட்டன என தனது முழங்கால், தொடையின் மேற்பகுதி என வெட்டப்பட்ட பகுதிகளை தனது உடல் அளவில் சுட்டிக்காட்டி விளக்கினார்.


நான்கு துண்டங்களாக வெட்டப்பட்ட அந்த உடல்களை இராணுவத்தினர் குழிதோண்டிப் புதைத்தனர். மக்களால் இந்தக் கொடூர சம்பவங்களை புகைப்படமெடுக்க முடியாமல் போய்விட்டது என குறிப்பிட்டார் அந்த 20 வயதுப் பெண்ணான ஹசீனா பேகம்.


பெண்களையும் சிறுமிகளையும் சுற்றி வளைத்த இராணுவத்தினர் தனது கிராமத்தை தாக்கியதாகவும், சுமார் 13 சிப்பாய்கள் இரண்டு பதின்ம வயது சிறுமிகளை இழுத்துச் சென்று சிறுமிகளின் தாய்மார் மற்றும் ஏனையோரின் கண்ணெதிரிலேயே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர் என ஜனவரி மாதம் நடுப் பகுதியில் பங்களாதேஷிக்கு தப்பி வந்த ஹசீனா தெரிவித்தார்.


‘யா அல்லாஹ் ஏன் இவ்வாறான சித்திரவதைகளுக்கு என்னை ஆளாக்குகின்றாய் என்னை மரணிக்கச் செய்துவிடு’ என இறைவனிடம் கேட்டேன். நான் மியன்மாரை விட்டு வந்ததற்காக ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை. எனக்குத் தேவையாதல்லாம் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும்தான் இவை இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என நிதானமாக தெரிவித்தார் ஹசீனா.


சிறுபான்மை இன சமூகத்தினர் வாழ்ந்த கிரமங்களில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுக் கொலைகள், குழந்தைப் படுகொலைகள், பெண்கள் சிறுமிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கூட்டு வன்புணர்வுகள் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் சம்பந்தமாக புதிதாக பங்களாதேஷிக்கு தப்பி வந்த நூற்றுக்கணக்கானவர்களின் அனுபவங்களை தொகுத்து கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றினை வெளியிட்டது.


ரொஹிங்கிய ஆயுதக் குழுவான ஹரகா அல் யகீன் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில் ஒன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் ‘தூய்மைப்படுத்தும் நடவடிக்கை’ என்ற பெயரில் 2016 ஒக்டோபர் மாதம் இராணுவம் தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து 66,000 இற்கும் மேற்பட்ட ரொஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேஷிக்கு தப்பி வந்துள்ளனர்


2012 ஆம் ஆண்டு பொளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற வன் செயல்கள் காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்ததோடு 120,000 இற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். அதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட ஹரகா அல் யகீன் ஆயுதக் குழு சவூதி அரேபியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தொடர்புகைளைப் பேணி வருவதாக சர்வதேசப் பிரச்சினைகள் தொடர்பான குழுமம் தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தைச் சேர்ந்த நான்கு அலுவலர்களைக் கொண்ட குழு ஒக்டோபர் 9 தாக்குதலுக்குப் பின்னர் நிகழ்ந்த தாக்குதல்கள் காரணமாக வடக்கு ரக்ஹீன் மாநிலத்திலிருந்து பங்களாதெஷினுள் நுழைந்த ரொஹிங்கிய அகதிகளின் வாக்குமூலங்களைப் பெற்று ஐ.நாவின் புதிய அறிக்கையினைத் தொகுத்துள்ளது.


‘இனச் சுத்திகரிப்பினை’ மேற்கொள்வதற்கான இன ரீதியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நிரூபிப்பதற்கு இந்த வாக்கு மூலங்கள் தெளிவான சான்றுகளாகும் என ஐ.நா குழுவின் தலைவர் லீனா ஆர்விட்சன் தெரிவித்தார்.


ஒக்டோபர் மாதம் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்ததிலிருந்து ரொஹிங்கிய குடிமக்கள் அலையலையாக எல்லையைக் கடந்து வந்து அண்மைய தசாப்தங்களில் பங்களாதேஷுக்கு வந்து சேர்ந்துள்ள சுமார் 500,000 ரொஹிங்கியர்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.


புதிதாகத் தப்பி வந்தவர்களே மிகக் கொடூரமான, கிராமங்கள் தாக்கப்படுதல், கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை மற்றும் திட்டமிட்ட ரீதியில் பெண்களும் சிறுமிகளும் வன்புணர்வுக்குட்பட்டமை போன்றவற்றை நேரில் கண்ட அனுபவங்ளைக் கொண்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் குறைந்தது 1,500 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதனை கடந்த டிசம்பர் மாதம் செய்மதிப் படங்களின் உதவியுடன் மனித உரிமைகள் கண்காணிப்பகம் பகுப்பாய்வு செய்தது.


புதிதாக வந்துள்ளவர்கள் மூங்கில் தடிகளையும் பிளாஸ்ரிக் கூரைத் தகடுகளையும் பயன்படுத்தி தமது கூடாரங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.


‘அகதிகள் நெருக்கமாகவும் கூட்டுக் குடும்பங்களாகவும் வசித்து வருவதால் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த சடுதியான மக்கள் வருகை உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மனிதாபிமான முகவர் நிறுவனங்களுக்கும் பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன’ என பங்களாதேஷிலுள்ள குடிபெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் திட்ட முகாமையாளரான பெப்பி கிவினீமி றெபியூஜீஸ் டீப்லி எனற அமைப்பிற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.


‘மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் பிரதேசங்களில் புதிய குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மியன்மாரில் இருக்கும்போது அல்லது எல்லையைக் கடக்கும்போது காயம்பட்டமை மற்றும் உணவு மற்றும் சத்துக் குறைபாடு என்பன புதிதாக வருபவர்களின் சுகாதாரம் மற்றும் நலனில் பாதிப்புச் செலுத்துகின்றன’ எனவும் கிவினீமி தெரிவித்தார்


ரொஹிங்கிய அகதிகள் இலட்சக் கணக்கானோர் பங்களாதேஷில் தங்கியிருந்தபோதிலும் 30,000 பேர் மாத்திரமே ‘உத்தியோகபூர்வமாக’ முகாம்களில் தங்கியிருப்போராக பதிவு செய்யப்பட்டுள்ளனர் பதிவு செய்யப்பட்ட அகதிகளுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயமும் பங்களாதேஷ் அரசாங்கமும் உதவி வருகின்றன. பதிவு செய்யப்படாத அகதிகளுக்கு உத்தியோகபூர்வ உதவிகள் எவையும் கிடைப்பதில்லை.


இவர்களது நிலை மிகவும் ஆபத்தானதாகும். அவர்கள் மிக அரிதாகவே சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்கின்றனர். தாம் கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்பட்டு மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக குற்றங்கள் பற்றி முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையங்களுக்கும் செல்வதைத் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.


மீன் பிடித்தல், றிக்ஷா வண்டி இழுத்தல் அல்லது தினக் கூலியாக வயல்களில் வேலை செய்தல் தவிர்ந்த சொற்பமான வாழ்கைக்கான உழைப்புகளுக்குரிய வழிகள் காணப்படுகின்றன. தினக் கூலியாக வேலை செய்யும் போது சக பங்களாதேஷ் கூலியாட்களை விட குறைவான கூலியே இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.


இந்த நிலையில் வயதானவர்களில் நிலையோ மிகவும் கவலைக்குரியது. அப்துல் குத்தாஸ் 50 வயது நபர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷுக்கு வந்தவர். ‘எனக்கு கடையொன்றை ஆரம்பிக்கும் கனவு இருந்தது. ஆனால் நான் சந்தைக்குச் சென்றால் உள்ளூர் மியன்மார் அதிகாரிகள் காரணமின்றி என்னைத் தாக்குகின்றனர்.


என்னால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. எனக்கு காணி இருந்து. அதில் நெல் பயிரிட்டேன். ஆனால் நான் கஷ்டப்பட்டு பெற்ற அறுவடையில் அரைவாசியை அரசாங்கம் பறித்துக்கொண்டது அதனால் நான் நாடடைவிட்டு வந்தேன்’ எனத் தெரிவித்தார் அப்துல் குத்தாஸ்.


குத்தாஸ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷ் அரசாங்கத்தினால் அகதியாகப் பதிவு செய்யப்பட்டவர். அவருக்கு உதவி அட்டை இருப்பதன் காரணமாக நிவாரணமும் மருத்துவ வசதிகளும் கிடைக்கின்றன. ‘பிறந்த மண்ணைவிட்டுப் பிரிவது மிகவும் கவலையானது. இங்கு வந்திருப்பவர்களுக்கு மனித உரிமைகள் இல்லை, இங்கு அகதிகளாக பதிவு செய்யமாட்டார்கள். வாழ்வதற்கு உழைப்பது மிகவும் கஷ்டம்’ எனவும் சுட்டிக்காட்டினார் குத்தாஸ்.


முன்னர் வந்தவர்களை விட புதிதாக வந்தவர்கள் மிகவும் ஸ்திரமற்ற தன்மையிலேயே காணப்படுகின்றனர், எனினும் இரு தரப்பினரும் பாதுகாப்புக்காகவும் அடிப்படை தேவைகளுக்காகவுமே பங்களாதேஷுக்கு வந்துள்ளனர்.


பாத்திமா பேகம் மியன்மாரிலுள்ள தனது கெயாய்பாரா கிராமம் தாக்கப்பட்டதையடுத்து 20 நாட்களுக்கு முன்னர் பங்களாதேஷுக்கு வந்தவர். பங்களாதேஷுக்கு எல்லையினைக் கடந்து வருவதற்கு முன்னதாக 16 தடவைகள் கிராமத்தைவிட்டு தப்பியோடியுள்ளார். ‘ஒரு நாள் நாங்கள் வீட்டில் இருந்தபோது துப்பாக்கி வேட்டுச் சந்தம் கேட்டது. பிள்ளைகளை சேர்த்தெடுத்துக் கொண்டு அயல் கிராமத்திற்கு ஓடினோம். இராணுவத்தினர் வரும்போது இவ்வாறுதான் நாம் ஓடுவது வழக்கம். எமக்கு பங்களாதேஷுக்கு வந்து சேர்வதற்கு இரண்டு மாதங்கள் எடுத்தது’ எனத் தெரிவித்தார் பாத்திமா பேகம்.


பாத்திமாவும் அவரது பிள்ளைகளும் தப்பி வரும்போது வீதிகளில் அரைகுறையாகப் புதைக்கப்பட்ட சடலங்களைத் தாண்டி பயணித்துள்ளனர். ‘நான் தொடர்ச்சியாக அழுதேன், எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இருக்கவில்லை. இரண்டு மாதங்களாக நான் தூங்கவே இல்லை, பயம் ஒவ்வவொரு கணமும் எங்களை கிட்டத்தட்ட மரணிக்கச் செய்தது’ எனவும் பாத்திமா கூறினார்.


தற்போது கொக்ஸ் பஸாரிலுள்ள பலு கலி முகாமில் தங்கியிருக்கும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் போதிய உணவில்லை எனக் கூறுகிறார். பாத்திமா தினமும் தனியாக இருந்து மியன்மாரில் தான் கழித்த காலங்களை எண்ணிப்பார்க்கிறார். ‘ எனக்கு அழுதான் வருகிறது நான் எனது நாட்டையும் வீட்டையும் இழந்துள்ளேன். எங்களுக்கு வாழ்க்கைக்கு தேவையானதை விட அதிகமான உணவு இருந்து. இங்கு எமக்கு உதவுவதற்கு எவரும் இல்லை என கவலையுடன் கூறுகிறார் பாத்திமா


மனித உரிமை அமப்புக்கள் ‘உலகிலேயே மிகவும் பாதிப்புக்கு இலக்கான மக்களாக’ ரொஹிங்கிய சிறுபான்மை முஸ்லிம் மக்களை விபரித்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து நாளுக்கு நாள் றக்ஹீன் மாநிலத்தில் ரொஹிங்கிய மக்களுக்கு எதிராக படுகொலையுடன் கூடிய தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.




Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.