( ஏ.ஆர்.மதீஹா றபீக் )
நிந்தவூர்ப் பிரதேசத்தில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள 48 மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று நிந்தவூரிலுள்ள அம்பாரை மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
'பெஸ்ட் ஒப் யங்' சமூக சேவை அமைப்பின் தலைவரும், ஊடகவியலாளருமான ஏ.புஹாது தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், ஹைறு குறூப் ஒப் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் இஸட்.எம்.ஹைறு ஆகியார் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் ஹபீப் வங்கி முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன், இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் எம்.ஐ.எம்.சித்தீக், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.அஹமது உள்ளிட்ட கல்விமான்கள் பலரும், பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 48 மாணவர்களும், அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதே வேளை முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன், இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் எம்.ஐ.எம்.சித்தீக், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.அஹமது ஆகியோர் கல்விக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-'பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளோரைப் பாராட்டும் இன்றைய நிகழ்வானது, எதிர்காலத்தில் நிந்தவூர்ப் பிரதேசத்தில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை' எனத் தெரிவித்தார்.

















Post a Comment