முஸ்லிம் பிரதிநிதிகள் சக்தியற்றவர்களே

                                       எஸ்.றிபான் -
இலங்கையில் அதிகம் பேசப்படுகின்றவைகளில் ஒன்றாக வில்பத்து சரணாலயமும் இருக்கின்றது. வில்பத்து காட்டில் ஒரு பகுதியினை சட்டவிரோதமாக அழித்து முஸ்லிம்கள் குடியேறியுள்ளார்கள். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வில்பத்து காட்டுப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டுமென்று பௌத்த கடும்போக்கு இனவாதிகளும், ஒரு சில சூழலியலாளர்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து பிரதேசத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுள்ளார். வில்பத்து காட்டினை அழித்து முஸ்லிம்கள் குடியேறியுள்ளார்கள் என்று தெரிவித்து முஸ்லிம்களின் பாரம்பரிய காணிகளை பறித்துக் கொள்வதற்கே இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. முஸ்லிம்களை குறிவைத்து பௌத்த கடும் போக்கு இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் புத்திசாதுரியமான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு முஸ்லிம் தலைவர்களிடம் எந்தவொரு திட்டமும் கிடையாது.
வில்பத்து சாரணாலயம் சுமார் 130ஆயிரம் (130,000) ஹெக்டேயர் பரப்பைக் கொண்டது. இதன் வடமேற்கு எல்லையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி ஆகிய முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களின் மொத்த பரப்பளவு சுமார் 165 சதுர கிலோ மீற்றராகும்.
இடம்பெயர்வு
நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் விடுதலைப் புலிகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாவார்கள். அதிலும் வடக்கு முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். 1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து இரு நூறு ரூபா பணத்துடன் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் விரட்டினார்கள். இவர்களில் அதிகம் பேர் புத்தளத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள்.
1990ஆம் ஆண்டு முசலிப் பிரதேசத்தில் முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி ஆகிய பிரதேசங்களில் பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறியமையால் மேற்படி கிராமங்களின் பெரும் பகுதி காடுகளாக காட்சியளித்தன. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முசலிப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதற்கு முற்பட்டார்கள். அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள் காடுகளாக மாறியிருந்தன.
சவால்கள்
2009ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீளவும் தமது பரம்பரை வாழ்விடங்களில் குடியேறுவதற்கு முற்பட்ட போது பல சவால்களை எதிர் கொண்டார்கள். இவர்கள் வாழ்ந்த இடங்களில் பெரும்பகுதிகள் யுத்தத்தின் கோரத்தால் அழிக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான சிதைவுகள் மட்டுமே காணப்பட்டன. குடியேற்றப் பிரதேசங்கள் காடுகளாக மாறியிருந்தன. வீடுகளும், பாடசாலைகளும், பள்ளிவாசல்களும் காடுகளுக்கு மத்தியில் சிதைவடைந்து காணப்பட்டன. இச்சிதைவுகளை வைத்தே முசலிப் பிரதேசத்தில் உள்ள முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி போன்ற கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்களின் வாழ்விடங்களை அடையாளங் கண்டார்கள்.
ஆயினும், சுமார் 20 வருடங்களின் (2009இல்) பின்னர் மேற்படி கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு அரசாங்கமோ அல்லது சர்வதேச நாடுகளோ, அமைப்புக்களோ போதிய உதவிகளைச் செய்யவில்லை. இதனால், இன்று வரைக்கும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஆலையில் அகப்பட்ட கரும்பாகவே உள்ளது.
அத்தோடு இவர்கள் மீளவும் குடியேறுவதற்கு போதிய காணி வசதிகளும் இருக்கவில்லை. ஏனெனில், 1990ஆம் ஆண்டு மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களிலிருந்து 521 குடும்பங்களைச் சேர்ந்த 1980பேர் வெளியேற்றப்பட்டார்கள். இவர்கள் சுமார் 20 வருடங்களின் பின்னர் இவர்களின் தொகை 1320 குடும்பங்களைச் சேர்ந்த 4320பேராக அதிகரித்துக் காணப்பட்டன. இதனால், இத்தொகையினரை மீள்குடியேற்றம் செய்வதில் காணிப் பிரச்சினையும் காணப்பட்டது.
பூர்வீக நிலங்களில் மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொண்டச்சி, தம்பட்ட முதளிக்கட்டு, கூளான் குளம், முசலி, புதுவெளி ஆகிய கிராங்களில் வாழ்ந்த காணியற்றவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, வில்பத்து சரணாலயத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களின் பூர்வீக காணிகளில் குடியேறப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் சட்டவரையரைக்கு உட்பட்ட வகையில் வழங்கப்பட்ட காணிகளிலுமே முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், முஸ்லிம்கள் தாங்கள் குடியேற வேண்டுமென்பதாற்காகவோ, அரச காணியை அபகரித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவோ வில்பத்து காட்டினை அழிக்கவில்லை.
வில்பத்து சரணலாயத்தில் எவ்வித குடியிருப்புக்களும் இல்லை. அத்தோடு, வில்பத்து சரணாலயத்திலிருந்து ஒரு மைல் வரையிலான பரப்பளவு பிரதேசம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கும் குடியிருப்புக்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க 2015.05.11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் அங்கு மீளக் குடியேற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்கி மீளக் குடியேற்ற வேண்டுமென்று தெரிவித்திருந்தார். இவ்வாறு கருத்துக்களை முன் வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து காட்டினை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளமை முஸ்லிம்களுக்கு குறிப்பாக வில்பத்து வனத்தின் எல்லைக் கிராம மக்களுக்கு பேரிடியாகவுள்ளது.
1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முசலிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முஸ்லிம்கள் வில்பத்து காட்டினை அண்மித்த பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் காலத்திலேயே குடியேற்றப்பட்டார்கள். இராணுவத்தின் தேவைக்காக பெறப்பட்ட காணிகளுக்கு பதிலாகவும், காணிகளற்றவர்களுக்கும் தலா அரை ஏக்கர் வீதம் மூவின மக்களுக்கும் காணிகள் சட்ட ரீதியாக வழங்கப்பட்டன. 
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் வில்பத்து காட்டினை முஸ்லிம்கள் அழித்து சட்ட விரோதமாக குடியேறியுள்ளார்கள் என பௌத்த இனவாத அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டன. இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து காட்டினை அண்மித்த பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். அத்தோடு, இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பற்றியதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார். மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலளார் நிஹால் ரூபசிங்கவுக்கு பணிப்புரையும் விடுத்திருந்தார். நிஹால் ரூபசிங்க ஜனாதிபதியிடம் (11.05.2015) அறிக்கையை சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில் வில்பத்து வடக்கு பெரியமடு பிரதேசத்தில் அமைந்துள்ள வில்பத்து வனப் பிரதேச சரணாலயத்தில் மீள்குடியேற்றத்திற்காக வனபாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட 2500 ஏக்கர் காணியிலேயே மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் 04ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சினால் ஜனாதிபதியின் விசேட பிரிவின் மூலம் மன்னார் மாவட்டத்தில் முசலி, மாந்தைமடு பிரதேசங்களின் செயலாளர் பிரிவுகளில் 1080 ஏக்கர் காடு மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது. பின்னர் பிக்காய், வன்னிக்குளம் பிரதேச காடுகள் விடுவிக்கப்பட்டன. இவ்வாறு 2500 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் அநுர உத்தரசிங்கவும் தெரிவித்திருந்தார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக செயற்பட்ட எம்.வை.எஸ்.தேசப்பிரிய வில்பத்து வனப் பிரதேசத்தில் மீள்குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்று தெரிவித்தார். இவர்களின் அறிக்கைகளின் படி வில்பத்து பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மீள்குடியேற்றம் சட்ட விரோதமானதல்ல என்பது தெளிவாகின்றன.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காட்டுப் பகுதியில் முஸ்லிம்கள் மாத்திரமின்றி மூவின மக்களும் குடியேற்ப்பட்டுள்ளார்கள். ஆனால், பௌத்த இனவாதிகள் தனியே முஸ்லிம்கள் மாத்திரம்தான் குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துக் கொண்டிருப்பது பூர்வீகக் குடிகளாக உள்ள முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வட மாகாண முஸ்லிம்களை துரத்தியது போன்று துரத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
மறிச்சிக்கட்டி எல்லையிலிருந்து மோதர ஆற்றின் தெற்காக வில்பத்து வனப் பிரதேசத்திற்குள் கடற்கரையை அண்மித்த பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் காடுகளை அழித்து குடியேறியவர்கள் என்று சொல்லுவதில்லை. இந்த உண்மையை அமைச்சர் றிசாட் பதியுதீனை தவிர வேறு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எடுத்துச் சொல்லுவதுமில்லை. 
மேலும், இலங்கை நிலஅளவை திணைக்களத்தால் 1938 ஆண்டு வெளியிடப்பட்ட ஓரங்குலபடம், 1992ல் வெளியிடப்பட்ட (1:250 000 அளவுத்திட்ட) மெற்றிக் தேசப்படம், 1990ம் ஆண்டு வெளியிடப்பட்ட (1:100 000) நிலப்பயன்பாட்டுப் படம், 2003ல் வெளியிடப்பட்ட 1:500 000 மெட்ரிக் படம், 1994ல் வெளியிடப்பட்ட 1:50 000 வீதிப்படம் ஆகிய தேசப்படங்கள், 1956ல் எடுக்கப்பட்ட 1:40 000 அளவுடைய விமான ஒளிப்படங்கள் , இன்றுவரை வெளியிடப்படுகின்ற செய்மதிப்படங்கள் போன்ற அணைத்து படங்களையும் அவதானிக்கின்ற போது வில்பத்து சரணாலய எல்லைக்குள்ளோ அதனைச் சூழ்ந்துள்ள ஒரு மைல் வரையான பாதுகாக்கப்பட்ட வன எல்லைக்குள்ளோ வடமாகாண முஸ்லிம் குடியிருப்பு எதுவும் அமைக்கப்படவில்லை என முன்னாள் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் முஸ்தபா முகம்மது மஸ்தான் தமது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் றிசாட் மீது குற்றச்சாட்டு
இதே வேளை, வடமாகாண முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள அமைச்சர் றிசாட் பதியுதீன் வில்பத்து காட்டினை அழித்து சுமார் 600 ஏக்கர் காணியை தனதாக்கி வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவர் தமது சகோதரர் ஒருவரின் பெயரில் அரசாங்கத்தின் காணியை சட்டவிரோத கையகப்படுத்தி வைத்துள்ளார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. பௌத்த இனவாத அமைப்புக்களும், தேரர்களும் இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும் அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனை முற்றாக மறுத்துக் கொண்டிருக்கின்றார். தான் அவ்வாறு வில்பத்து காட்டினை அழித்து தனதாக்கி வைத்திருந்தால் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளலாம். தான் குற்றவாளி எனக் கண்டால் தண்டனை வழங்கலாமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
அரசாங்கம் வில்பத்து விவகாரத்தை இனவாதிகளின் இழுவைக்கு ஏற்றவாறு கொண்டு சொல்லாது ஒரு நீதியான விசாரணையை மேற்கொள்வதற்கு ஒரு ஆணைக் குழுவினை ஏற்படுத்த வேண்டும். அதில் மூவினத்தவர்களும் அங்கம் வகிக்க வேண்டும். அதன் மூலமாக யார் குற்றவாளி என்றாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பௌத்த இனவாதிகளினால் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யாக இருக்குமானால் பௌத்த இனவாதிகளை அடங்கி இருக்குமாறு கட்டளையிட வேண்டும். இதன் பின்னரும் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைப்பார்களாயின் அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டக் கூடாது.
மு.கா மௌனம்
இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்தாலும் அக்கட்சி உள்ளக முரண்பாட்டுப் புயலில் மாட்டி தவித்துக் கொண்டிருக்கின்றது. இக்கட்சி மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் பிரச்சினைகள், உரிமைகள் விடயங்களில் தன்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு விரும்பாத கட்சியாகவே இருந்து கொண்டிருக்கின்றது. இதனால், அக்கட்சியின் தலைவர் மீது ஆதரவாளர்கள் குறைகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வில்பத்து விவகாரத்தில் றிசாட் பதியுதீன் மாத்திரமே அடிக்கடி பேசிக் கொண்டிருக்கின்றார். அவர் அரசாங்கத்தில் இருந்து கொண்டே தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் கொண்டுள்ளார். இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வில்பத்து விவகாரத்தில் செவிடன் போலவும், குருடன் போலவும் வேடம் பூண்டுள்ளது. இது வரைக்கும் வில்பத்து விவகாரத்திற்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தீவிரம் காட்டவில்லை. அமைச்சர் றிசாட் பதியுதீன் இது விடயத்தில் ஊழல் புரிந்துள்ளார். அவரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் தங்களது கட்சிக்கில்லை என்பதாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அணுகு முறை தெளிவுபடுத்துகின்றது.
ஆயினும், றிசாட் பதியுதீன் என்ற தனி நபருக்கு அப்பால் இப்பிரச்சினை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது என்ற சமூக உணர்வில் காரியமாற்ற முன் வருவதாகவும் தெரியவில்லை. வில்பத்து காட்டினை அழித்து காணிகளை றிசாட் பதியுதீன் அபகரித்து இருப்பராயின் அவரை அக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, அப்பாவி மக்களின் மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதான் ஒரு சமூகக் கட்சியின் பணியாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வில்பத்து விவகாரத்தில் மாத்திரமின்றி கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் காணிகள் வனவிலங்கு அதிகார சபையாலும், தொல்பொருள் திணைக்களத்தினாலும் எல்லைகளையிட்டு தமது திணைக்களத்திற்குரியதென்று சட்டம் பேசிக் கொண்டிருப்பதற்கு கூட தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிகளும், பிரதேசங்களும் பௌத்த இனவாத அமைப்புக்கள் மற்றும் தேரர்களினால் குறி வைத்து காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய இடங்களுக்கு ரவூப் ஹக்கீம் சென்று பார்வையிடுகின்றார். அங்கு கூடும் மக்களிடம் விரைவில் தீர்வினைப் பெற்றுத் தருவேன் என்று விரைந்து செல்லுகின்றார்கள். ஆனால், எடுக்கப்படும் நடவடிக்கைகள் மறைந்து கொண்டு போவதனையே அவதானிக்க முடிகின்றன.
வில்பத்து விவகாரம் தொடர்பாக றிசாட் பதியுதீன் தமது அமைச்சில் கூட்டிய கூட்டத்திற்கும், முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரோ அவர் சார்பான பிரதிநிதிகளோ கலந்து கொள்ளவில்லை. முஸ்லிம் மீடியா போரத்தின் கூட்டத்திற்கு வருவதாக ரவூப் ஹக்கிம் மற்றும் ஹரீஸ் ஆகியோர்கள் தெரிவித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்தின் பிரச்சினையை கையாளுவதனைக் கூட பிரித்து வைத்துப் பார்ப்பதனாலும், மாற்று அரசியல் கட்சியோ, தலைவரோ சமூகத்தின் பிரச்சினையால் அரசியல் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாதென்ற குறுகிய சிந்தனையின் அடிப்படையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர்களின் ஊழல்களை மூடி மறைத்து வருகின்றார்கள். சமூகத்தின் குறைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க முடியாத குறைமனிதர்களாகவும் உள்ளார்கள். தமது மக்கள் பிரதிநிதிகளின் சமூக சிந்தனையற்ற செயற்பாடுகள் குறித்து முஸ்லிம் சமூகம் கேள்விகளைக் கேட்பதில்லை. தலைவர்களை விமர்சிக்கின்றார்கள். தலைவர்கள் வந்தால் மாலை அணிவித்து, பட்டாசு கொளுத்தி அறம் மறந்து அநீயாயங்களுக்கு துணையாக நிற்கின்றார்கள். தர்மத்தை நிலை நாட்டுவதற்கு முன் வராத சமூகம் அந்த தர்மத்தினால் தண்டிக்கப்படுவதனை யாராலும் தடுக்க இயலாது.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
சிறுபான்மையினரின் அமோக ஆதரவில் ஆட்சியை கைப்பற்றிக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரசிங்கவும் அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட ஆரம்ப காலங்களில் சிறுபான்மையினர் மனங்களில் இடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தராஜபக்ஷவின் அதரவு அணியினரும், பௌத்த இனவாத அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தேரர்களும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக போராட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். 2020ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தினை யாராலும் அசைக்க முடியாதென்று ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் தெரிவித்துக் கொண்டாலும், அவர்கள் பௌத்த இனவாதிகளின் முன்னிலையில் தமது உறுதிப்பாட்டை தளர்த்தியவர்களாகவே உள்ளார்கள். பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைளை கட்டுப்படுத்தாது அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதனையும், அவர்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சித்தமாக இருப்பதனையும் அண்மைய நடவடிக்கைகள் காட்டுகின்றன.
நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக பௌத்த இனவாத அமைப்புக்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காகவே பௌத்த இனவாதிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் அரசாங்கம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதே வேளை, பாராளுமன்றத்தில் உள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றார்கள். வில்பத்து விவகாரத்தினைப் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர மற்றவர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டாலும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்று அழுத்தம் கொடுப்பதற்பு சக்தியற்றவர்களாகவே உள்ளார்கள்..



Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.