சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சவூதி எயார் லைன்ஸ் விமானத்தில் பயணித்த 340 பேரின் பயணப் பொதிகளும் அதே விமானத்தில் கொண்டு வரப்படாமையால் பயணிகள் கடும் விரக்தியையும் அசௌகரியத்தையும் சந்தித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக இவ்விமானத்தில் பயணித்த நூற்றுக் கணக்கான இலங்கையர்கள் பெருநாள் கொண்டாட முடியாத நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
கடந்த சனிக்கிழமை (02.07.2016) அதிகாலை 2 மணிக்கு ரியாதிலிருந்து மாலைதீவு வழியாக குறித்த விமானம் கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.
இதில் சுமார் 340 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் சவூதியில் தொழில் செய்துவிட்டு நோன்புப் பெருநாள் விடுமுறைக்கு நாடு திரும்பியோரே அதிகமானவர்கள். அத்துடன் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதில் பயணித்துள்ளனர்.
இவ் விமானத்தில் பயணித்த அனைவரும் வழக்கம் போன்றே கைகளில் எடுத்துச் செல்லக் கூடிய பொதிகள் (Hand Luggage) தவிர ஏனைய பொருட்கள் அடங்கிய பைகள் மற்றும் பொதிகளை விமான நிலையத்தில் கையளித்துள்ளனர்.
இந்நிலையில் விமானம் சனிக் கிழமை நண்பகல் 12:30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறி தமது பொதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்னரே அந்த அதிர்ச்சியான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் அதிகமான பிரயாணிகள் பயணித்ததன் காரணமாக பொதிகளின் எடை அதிகரித்துவிட்டதால் அவற்றை இதே விமானத்தில் கொண்டுவர முடியாமல் போய்விட்டது. எதிர்வரும் புதன் கிழமையே உங்கள் பொதிகள் இலங்கையை வந்தடையும். அதன் பின்னர் உங்கள் வீடுகளுக்கு நாமே கொண்டு வந்து ஒப்படைப்போம் என விமான சேவை அதிகாரிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான குறியீட்டு இலக்கங்கள் அடங்கிய பற்றுச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
சவூதி எயார் லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் இந்த பொறுப்பற்ற செயல் காரணமாக ஆத்திரமடைந்த பயணிகள் அவ்விடத்திலேயே தமது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்தவர்கள் தமது உடனடிப் பாவனைக்குரிய ஆடைகள் கூட குறித்த பொதிகளிலேயே இருப்பதாக கூறியதையடுத்து அவர்கள் தமக்குத் தேவையான ஆடைகளை கொள்வனவு செய்ய ஒரு தொகைப் பணம் விமான சேவை நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் பல வருடங்கள் சவூதியில் தொழிலாளர்களாகவும் பணிப் பெண்களாகவும் இருந்துவிட்டு நோன்புப் பெருநாளை குடும்பத்துடன் கொண்டாடும் நோக்கில் அதற்குத் தேவையான ஆயத்தங்களுடன் வருகை தந்தவர்களே பொதிகள் உரிய நேரத்திற்கு கிடைக்காமையால் கடும் மன உளைச்சலையும் அசௌகரியங்களையும் சந்தித்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த தமது குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியோடு அழைத்துச் செல்வதற்காகவும் அவர்கள் தமக்காக கொண்டு வரும் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காகவும் தமது ஊர்களிலிருந்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வருகை தந்தவர்களும் இதனால் பலத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
முழுக் குடும்பத்தினதும் பெருநாளைக்குத் தேவையான ஆயத்தங்களுடன் வருகை தந்தவர்கள், உரிய வேளைக்கு பொதிகள் கிடைக்காமையால் மேலதிக பொருளாதார செலவுகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment