ஓய்வூதியப் பணம் பெறுவோரை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செலுத்தப்படவுள்ள நிலுவைப் பணங்களைப் பெற்று தாம் செலுத்துவதாகக் கூறி இந்தக் கும்பல் பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும், நாட்டின் பல பிரதேசங்களிலும் குறித்த கும்பல் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதேச செயலகங்களிலுள்ள கணக்காளர்கள் அல்லது ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகள் எனக் கூறி மக்களின் இல்லங்களுக்கு சென்று இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இதேவேளை, பணத்தை வசூலிப்பதற்கு தமது திணைக்களமோ அல்லது பிரதேச செயலக காரியாலய அதிகாரிகளோ நியமிக்கப்படவில்லை என ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் தாம் செலுத்தப்பட வேண்டிய நிலுவைப் பணம் தொடர்பில் பிரதேச செயலகங்கள், ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகள் அல்லது 1970 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புக் கொண்டு ஓய்வூதியம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள் குறித்து 119 என்ற பொலிஸ் அவசரப் பிரிவுக்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் ஓய்வூதிய திணைக்களத்தின் 1970 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் அறிவிக்குமாறு ஓய்வூதிய திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment