முன்னாள் அமைச்சரும், தேசியக் காங்கிரஸ் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் நேற்று மாலை அக்கரைப்பற்றிலுள்ள தனது 'கிழக்கு வாசலில்' ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, நடாத்தினார்.
இச்சந்திப்பின் போது முன்னாள் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, தேசியக் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகம் ஏ.உதுமாலெவ்வை, தேசியக் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி.எம்.எம்.பஹ்ஜி, சம்மாந்துறைப் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எம்.நௌஷாட் உள்ளிட்ட உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியில் சம்மாந்துறைப் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எம்.நௌஷாட் தலைமையில் 103 பேர் அடங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்வின் கரங்களைப் பற்றி அவரது தலைமையிலான தேசியக் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' இன்று கிழக்கு மாகாண முஸ்லிம்களை கிழக்கு மாகாணத் தலைமைகளும், கிழக்கு மாகாணத் தமிழர்களை கிழக்கு மாகாணத் தலைமைகளும் ஆழும் நிலைமைகளை உருவாக்க வேண்டும். இப்போது கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களை, கிழக்கிற்;கு வெளியே உள்ள தலைமைகள் ஆழ்வதும், தொடர்ந்தும் ஏமாற்றல்கள் மூலம் ஆழ முற்படுவதும் தான் வேடிக்கை! எனவே, நமது இளைஞர்கள் இனியும் ஏமாறக் கூடாது. கிழக்கை ஆழ்வது தமிழனா? முஸ்லிமா? ஏன்பது ஒரு பிரச்சினையல்ல! கிழக்குத் தமிழரையும், கிழக்கு முஸ்லிமையும் பற்றி, கிழக்கிலுள்ள நாம் பேசுவோம், சிந்திப்போம். ஒற்றுமையாய் ஆட்சி செய்வோம்' எனத் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து, தனது ஆதரவாளர்கள் சகிதம் தேசியக் காங்கிரசில் இணைந்து கொண்ட முகம்மட் முஸ்தபா நௌஷாட் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'முன்னாள் அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் மறைவுக்குப் பின்னர் சம்மாந்துறைக்குப் பொருத்தமான தலைவர் ஒருவர் கிடைக்கவில்லை. ஆனால் கிழக்கு மக்களை ஆழக்கூடிய பொருத்தமான கிழக்குமாகாணத் தலைவனாக நாம் இன்று அமைச்சர் அதாஉல்லாஹ்வை இனங்கண்டு, அவருடன் இணைந்துள்ளோம். எப்படி அக்கரைப்பற்று மக்கள் தேசியக் காங்கிரஸிற்கு பூரண ஆதரவோ, அதுபோலவே இனிவருங் காலங்களில் சம்மாந்துறை மக்களும் தேசியக் காங்கிரஸிற்கு பூரண ஆதரவை நல்குவார்கள் எனத் தெரிவிக்க விரும்புகிறேன்' எனத் தெரிவித்தார்.








Post a Comment