-மக்களை மறந்த அரசியல் வியாபாரிகள் என பொது மக்கள் விசனம்!-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )கடந்த மூன்றரை மாதங்களாக (111 நாட்களாக) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாமையால் மக்கள் தமது கடமைகளைச் செய்து கொள்ள முடியாமல் அன்றாடம் ஏமாற்றப்பட்டு, அலைந்து திரிகின்றனர்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடந்த ஆறு வருடங்கள் சேவையாற்றி, பதவியுயர்வு பெற்றுச் சென்ற முன்னாள் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் கடந்த 2018.04.14ந் திகதி நிந்தவூர் பிரதேச செயலகத்தை விட்டு, திருகோணமலையிலுள்ள பிரதம செயலாளர் காரியாலயத்தில் இணைந்து கொண்டார்.
அவர் விட்டுச் சென்ற பதவி வெற்றிடம் 111 நாட்கள் கடந்தும் இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால் சில காணி உரிமை மாற்றங்கள், புதிய அமைப்புக்களின் பதிவுகள், நிதிசம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் எதுவுமே செய்து கொள்ள முடியாமல் நாளும் மக்கள் பிரதேச செயலகம் வந்து அலைந்து திரிவதைக் காணக் கூடியதாக உள்ளது.
இதனால் எத்தனையோ ஏழைக் குமர்களின் திருமணங்கள் பிற்போடப்பட்டுள்ளதென்றும், எத்தனையோ கணவன் மனைவிப் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளனவென்றும், தீர்க்கப்படாத கடன் தொல்லைகளுக்குள்ளான கணவன்மார் மனைவியர்களோடு பிரச்சினைப்பட்டுக் கொண்டு, தாய் வீடுகளில் வாழ்வதாகவும், குழந்தைகள் சீரழிவதாகவும் நமது விசேட நிருபரிடம் மக்கள் தமது கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இப்பிரச்சினைகள் எதனையும் கண்டு கொள்ளாமல், மக்கள் விடயங்களில் அக்கரையில்லாமல் அரசியல் வியாபாரிகள் வலம் வருவதாகவும், எதிர்காலத்தில் இவர்களுக்குத் தக்க பாடம் புகட்டவேண்டும் என்றும் மக்கள் நொந்து கொள்வதைக் காண முடிகிறது.
என்னதான் இருந்தாலும் நிந்தவூர் பிரதேச செயலக விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் பின்வரும் விடயங்களில் ஏதாவதொன்றைச் செய்திருக்க வேண்டும் என்பது மகாஜனங்களின் எதிர்பார்ப்பாகும்.
• முன்னாள் பிரதேச செயலாளர் சென்றவுடன் புதியவர் ஒருவரை நியமித்திருக்க வேண்டும்.
• இல்லையேல் பதில் கடமைக்கான ஒழுங்குகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
• அல்லது, தற்போதுள்ள உதவிப் பிரதேச செயலாளருக்கு அதிகாரம் வழங்கியிருக்க வேண்டும்.
• இல்லலையேல் மாவட்டச் செயலாளர், அல்லது உதவி மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் வாரத்தில் ஒருநாளிலாவது நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து மக்களின் அவசியத் தேவைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவைகளில் எதனையும் செய்யாமல் கண்ணிருந்தும் குருடனாகவும், காதிருந்தும் செவிடனாகவும், உயிரிருந்தும் ஜடமாகவும் ஊரிற்குள் அரச சொகுசு வாகனங்களில் வலம் வருவதில் என்ன பிரயோசனம் இருக்கிறது என தேர்தல் காலங்களில் தேர்தல் வியாபாரிகளுக்கு வாக்களித்து, வாக்களித்து ஏமாற்றப்பட்ட மக்கள் நொந்து பேசுகின்றனர்.
எனவே, நிந்தவூர் பிரதேச மக்களுக்கு விடிவு கிடைக்குமா? அவர்களது பிரச்சினைகள் தீர வழி பிறக்குமா? பெருமூச்சோடு விடிவுக்காய் காத்திருக்கும் நிந்தவூர் மக்களின் பிரதேச செயலாளர் பிரச்சினை எப்போது தீருமோ!?!?

Post a Comment