அரசியல் பதர்களின் சூட்சுமமே இது!!!
குமுறுகிறார் காணி உரிமையாளர் பேராசிரியர் இஸ்ஹாக்.
'நான் ஒரு போதும் எவருடைய பொருளையும் எடுத்தவனல்ல. கொடுத்தவன்! ஆனால் காடைத்தனத்திற்கும், தீவிரவாதத்திற்கும் ஒரு போதும் அடிபணியேன்!! அட்டப்பள்ளம் மயான பூமி விவகாரத்தில் சில அரசியல் பதர்கள் அவர்களது சொந்த இலாபங்களுக்காக என்னை அவமதிக்கும் விதமாகத் திட்டமிட்டு செயற்படுகின்றனர். இதனை எண்ணி நான் மிகுந்த வேதனை அடைகின்றேன். விரைவில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளேன். ஆனால் நான் கல்நெஞ்சக் காரனல்ல. என்னுடைய இளகிய உள்ளத்தை வைத்து ஏமாற்ற நினைக்கின்றனர்' என்று காணி உரிமையாளரும், தென் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அட்டப்பள்ளம் மயான பூமி விவகாரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று தென் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் அவர்களின் நிந்தவூர் இல்லத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.
இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வேளையில் அவருடைய சட்டத்தரணி சம்சுதீன் இம்தியாசும் உடனிருந்து சட்டம் சம்பந்தமான விளக்கங்களை வழங்கினார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:- 'மேற்படி அட்டப்பள்ளத்திலுள்ள (12 ஏக்கர், ஒரு றூட், 34 பேச்சஸ்) காணியை நான் 1982ம் ஆண்டு சட்டப்படியான ஆவனங்களுடன் எனது மாமனாரின் உதவியோடு குழந்தை மரைக்கார் என்பவரிடமிருந்து கொள்வனவு செய்தேன். உடனடியாக எல்லைக் கல்லுகளையும் இட்டு ஆட்சி செய்து வந்தேன். அப்போது அது முழுவதும் ஒரு தென்னந்தோப்பாகவே இருந்தது. அங்கு எந்தவொரு சவமோ, கல்லறைகளோ காணப்படவில்லை. சில காலங்கள் நான் அமெரிக்காவிலிருந்து விட்டு வந்தபோது (1995ம்) ஆண்டு எனது காணியினுள் ஒரு சவம் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பொலிசில் முறைப்பாடு செய்தேன். பொலிசார் கோயில் தலைவருடன் என்னையும், சவங்கள் புதைத்தவர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தெரியாமல் புதைத்து விட்டோம். இனிமேல் இவரது காணிக்குள் புதைக்கமாட்டோம் என்று வாக்கு மூலம் அழித்து விட்டு வந்தனர். பின்னர் இவர்கள் ஏதோ ஒரு கெட்ட திட்டத்துடன் 1995ற்கும் 2008ற்கும் இடைப்பட்ட காலங்களில் மேலும் 3,4 சவங்களைப் புதைத்திருக்கின்றனர். காடையர் கும்பலை வைத்துக் கொண்டு எனக்கெதிராக சதி செய்து எனக்குரிய காணியைப் பறிக்கலாம் என்று நினைக்கின்றனர். இதற்கு எமது சமூகத்திலுள்ள சில அரசியல் பதறுகள் தமிழ் மக்களின் வாக்ககளை சூரையாடுவதற்காக எனது காணியை மயானத்திற்குப் பெற்றுத்தருவதாக வாக்களித்து செயற்படுவதாகவும், சில தமிழ் அரசியல் தலைமைகள் உண்மையை அறியாமல் சில விசமிகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பி ஊடகங்களைப் பயன்படுத்தி என்னையும், எனது சமூகத்தையும் அவமதிக்கும் விதமாக செயற்படுவதைக் கண்டு நான் மிகுந்த வேதனை அடைகின்றேன்.
நான் பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரை அதிகமான தமிழ் ஆசிரியர்களிடமே கல்வி கற்றவன். தமிழ் ஆசிரியர்களிடம் கற்ற நான் ஒருபோதும் தமிழ் சமூகத்திற்கு துரோகமிழைக்கமாட்டேன். நான் எப்போதும் தமிழ் முஸ்லிம் உறவைப் பலப்படுத்த நினைப்பவன். நான் ஒரு போதும் எவருடைய பொருளையும் எடுத்தவனில்லை. எப்போதும் கொடுப்பவன். யாருடைய பொருளையோ, அல்லது சொத்தையோ எடுக்க வேண்டிய நிலை எனக்கு வந்ததில்லை. வரவும் மாட்டாது. நான் எப்போதும் நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டு நடப்பவன். கொடுத்துப் பழக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த என்னிடம் கேட்பது போல் கேட்டிருந்தால் முடியுமான பகுதியைக் கொடுத்திருப்பேன். அதனை விட்டு விட்டு காடைத்தனத்தின் மூலமும், தீவிரவாதத்தின் மூலமும் என்னை ஏமாற்றிப் பறித்தெடுக்க நினைப்பது மடமையிலும் மடமையாகும். இதற்கு ஒரு போதும் நான் இடமளிக்கமாட்டேன்' என பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.
மேலும், அவரிடமுள்ள காணிக்கான உறுதிப்பத்திரம், அதற்கான நிலஅளவைக்கான வரைபடம், பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட பத்திரம், பொலிசில் பதிவு செய்யப்பட்ட இருதரப்பு இணக்கப்பாட்டுப் பிரதிகள் போன்ற சம்பந்தப்பட்ட பத்திரங்கள் யாவற்றையும் பத்திரிகையாளர்களிடம் காண்பித்து, உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு ஊடகவியலாளர்கள் உதவவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
Post a Comment