
-ஐ.தே.கட்சி வேட்பாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் ஆதங்கம்-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
' பத்து வருடங்களுக்கு மேல் நிந்தவூர் பிரதேச சபையை ஆட்சி செய்த தலைவர், உறுப்பினர்கள் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன செய்துள்ளார்கள் என்று நான் கேட்க விரும்புகின்றேன். அவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டனரே தவிர வேறு மண்ணையும் மக்களையும் வளர்க்கத்தவறி விட்டனர். பொது மக்களின் பொதுத் தேவைகளான கல்வி, சமூகப் பாதுகாப்பு, தொழில்வாய்ப்பு, கடல்வளங்கள் சம்பந்தமான விடயங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் நலன் கருதி வளர்க்க வேண்டும். ஆனால், இங்கு வாய்க்கால் வெட்டாமலே, வெட்டியதாகப் பணம் பெறப்பட்டுள்ளது! இவைகளெல்லாம் பொதுத் தேவை கருதிய விடயங்களா? என்று வாக்களிக்கின்ற நீங்களே நன்றாகச் சிந்தியுங்கள். இந்த விடயங்களை மேடையில் ஆக்ரோசமாகப் பேசுகின்ற நாங்கள் இன்னும் 05 வருடங்களின் பின்னர் மீண்டும் உங்களிடம் வரவேண்டும். ஆகக் குறைந்தது, இன்ன இன்ன விடயங்களைச் செய்தோம். ஒரு இலக்கை நோக்கிப்பயணித்தோம் முடியவில்லை என்றாவது நாங்கள் உங்களிடம் சொல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு இலக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் இங்கு வீற்றிருக்கும் வேட்பாளர்கள் உங்களிடம் வரமுடியாது. நீங்கள் இவர்களுக்கு வாக்களிக்கமாட்டீர்கள்' என்று ஐ.தே.க. வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீ.ல.மு.கா வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு நிந்தவூர் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பேசும் போதே சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேட்பாளர் எம்.ரி.எம்.சப்றாஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வேட்பாளர்களான ஏ.மஃறூப் மௌலவி, எம்.எம்.அன்சார் மாஸ்டர், எஸ்.எம்.ஐ.எஸ்.ஸறபுல்லாஹ் மௌலானா, ஏ.அலிக்கான், தேசியப்பட்டியல் உறுப்பினர்களான ஏ.எல்.நஜிமுத்தீன் ஆசிரியர், எம்.ஐ.ஆதம் அலி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.







Post a Comment