( என். சத்தியன் )
கல்முனைக் கல்வி வலயத்தில், நிந்தவூர்க் கோட்டத்திலுள்ள இமாம் றூமி வித்தியாலய அதிபர் ஏ.சி.ஹாமீதுக்கு எதிராக அதே பாடசாலையில் கடமையாற்றிய ஏ.எல்.ஏ.றபீக் எனும் ஆசிரியரினால் கடந்த 2017.03.28ந் திகதி இலஞ்சம், அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேற்படி விடயம் தொடர்பாக இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும்படி ; இதுவரை நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ளவர்கள் சுமார் 28 பேர்களுக்குத் தனித்தனியாகப் பதிவுத்தபாலில் அழைப்பாணைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவர்களில் சிலர் இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருப்பதாகவும், மேலும் பலர் இவ்வாரத்தில் சாட்சியமளிப்பதற்குத் தயாராகவுள்ளதாகவும் தெரியவருகிறது.
முதலாம் தரத்திற்குப் புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்குப் பெற்றோரிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தமை, மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சத்துணவில் மோசடிகள் செய்தமை, பாடசாலையிலுள்ள பெறுமதியான மரங்கள் சட்டவிரோதமான முறையில் தறிக்கப்பட்டமையும், பாடசாலைச் சமூகத்திற்குத் துரோகமிழைக்கப்பட்டமையும், பாடசாலையில் நடைபெற்ற கொந்தராத்து வேலைகளில் கப்பம் கோரியமையும், ஒப்பந்தக்காரர்களுக்கு வீண் தொல்லைகளை ஏற்படுத்தியமையும், பல்வேறு காரணங்களைச் சொல்லி, பாடசாலை மாணவர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அடிக்கடி சட்டவிரோதமான பண அறவீடுகள் செய்தமை தொடர்பாகவே மேற்படி அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ஆனால், இவ்வதிபர் பற்றிய முறைப்பாடுகள் பல 2014ம் ஆண்டுகளிலிருந்து இன்று வரை இப்பாடசாலை ஆசிரியர்களாலும், பாடசாலை அபிவிருத்திச் சபைச் செயலாளர், உறுப்பினர்களாலும், பெற்றோர்களாலும் கோட்டக் கல்வி அதிகாரி, வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் போன்றோருக்கு அனுப்பியும், இதுவரை இவ்வதிகாரிகளால் குறிப்பிட்ட அதிபருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதிபரது ஊழல் மோசடிகளுக்கு அதிகாரிகள் துணையாக இருப்பதாகவும் ஆணைக்குழு முன் பெற்றார் சிலர் சாட்சியமளித்திருப்பதாகத் தெரியவருகிறது.

Post a Comment