( ஏ.எல்.முஹம்மது இமாம் )
நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலய அதிபரின் சதிமுயற்சியினால் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் இருமாதச் சம்பளங்களிலிருந்து சுமார் ரூபாய் 23,300.00 குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிடப்பட்டு, தன்னை அதிபர் வேண்டுமென்று பழி தீர்க்கும் நோக்குடன் செயற்பட்டுள்ளார் என்றும், இதன் மூலம் தனது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்ட ஆசிரியர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரனைகள் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இதில் குறித்த ஆசிரியர் திருப்தியடையாத காரணத்தினாலேயே இவ்விசாரனை நாளை கல்முனையிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு, எம்மால் தகவல்களைப் பெறமுடியவில்லை. ஆனால், இது தொடர்பாக குறித்த ஆசிரியரைத் தொடர்பு கொண்டு கேட்டோம். 'இது தனக்கும், தனது அதிபருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளால் உருவான சூழலாகும். ஆனால் நான் வலயக் கல்விப் பணிப்பாளரையோ, அல்லது வேறு எந்த அதிகாரிகளையோ நான் எதிரியாகக் குறிப்பிடவில்லை. நான் எப்போதும் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். குறைக்கப்பட்ட சம்பளத்தை மீண்டும் பெற்றுத்தருமாறு கோரியே வலயக் கல்வி அதிகாரி அவர்களுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு சமர்ப்பித்திருந்தேன். எனது கோரிக்கையின் நியாயத்தன்மைகளை உணர்ந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் எனது குறைக்கப்ட்ட சம்பளத்தை மீளவழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். எனவே, நாளைய விசாரணைகளின் போது நாங்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து விடுவோம். எனது அதிபரின் செயலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளை, வலயக் கல்விப் பணிப்பாளரின் நேர்மையையும், மனிதநேயத்தையும் பாராட்டுகிறேன்' என்று குறித்த ஆசிரியர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.

Post a Comment