-சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தம்மிக்க பிரியந்த பிரதமஅதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் சமூக சேவைப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் இன்று நிந்தவூர் கடற்கரைப் பிரதேச திறந்த வெளியரங்கில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பிரியலால் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தம்மிக்க பிரியந்த பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், ஓய்வு பெற்ற அதிபர் திருமதி.மைமூனா செயினுலாப்தீன், நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.எல்.எம்.ஹமீட், நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன், டொக்டர்.எச்.எம்.றசீட் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், இராணுவத் தளபதிகளும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமூகங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான சினேக பூர்வ கிறிக்கற் சுற்றுப் போட்டிகள், பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வினோத விளையாட்டுக்கள், சகல இனமக்களையும் கௌரவப்படுத்தும் விதமான கலை, கலாச்சார நிகழ்வுகள் பலவும் மேடையேற்றப்பட்டன.
போட்டிகளிலும், ஏனைய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நிந்தவூர் உப பொலிஸ் நிலையத்தினரால் பொதியிடப்பட்ட பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தம்மிக்க பிரியந்த இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடு. இங்கு வாழும் மக்கள் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும். அப்போது தான் வெளிநாட்டுச் சதிகளை முறியடித்து நமது நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். இந்நோக்கத்தை நிறைவேற்றவே பொது மக்களின் ஆதரவுடன் பொலிசாரும் செயற்படுகின்றனர். பொலிசாரின் சேவைகளை மக்கள் புரிந்து கொண்டு, அவர்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
Post a Comment