-மாகாண சுகாதார அமைச்சர் நசீர் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கிழக்கு மாகாண கல்வியமைச்சும், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகமும் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தினமும், சிறுவர் பொருட் கண்காட்சியும் நேற்று அட்டாளைச்சேனை அல்- முனீறா பெண்கள் உயர்தரக் கல்லூரியில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் அம்பாரை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸீம் மௌலவி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் அம்பாரை மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாலைச் சிறுவர்களினால் உருவாக்கப்பட்ட கண்கவர் பொருட்கள், பொது மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இச்சிறுவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் பல அரங்கேற்றப்பட்டதோடு, சிறுவர்களை மகிழ்வூட்டும் வினோத நிகழ்வுகள் பலவும் இடம் பெற்றன. இந்நிகழ்வுகளைக் கண்டு களிப்பதற்காக சுமார் (35) முப்பத்தி ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இன்று கூடியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் கருத்துத் தெரிவிக்கையில்:- ' கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற பாகுபாடுகள் எதுவுமின்றி, எல்லோரும் இணைந்து இந்த நிகழ்வுகளை அட்டாளைச்சேனையில் ஒற்றுமையாக நடாத்துவதற்கு வழிகாட்டிய பாலர் பாடசாலைகளின் பணிப்பாளர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இவ்வாறான நிகழ்வுகள் மேலும் வழிநடாத்தப்பட வேண்டும். அப்போதுதான் எமது எதிர்காலச் சிறார்களின் வாழ்வு வளம் பெறும். சிறப்புப் பெறும்' எனத் தெரிவித்தார்.
Post a Comment