நல்லாட்சியில் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நமது மக்கள் பயன் அடையக் கூடிய திட்டங்களை அமுல்படுத்தாமல், சுய நல அரசியல் நோக்கத்திற்காக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் பணிபுரியும் அம்பாறை மாவட்ட ஊழியர்களுக்கு வெளி மாகாணங்களுக்கு அவசர இடமாற்றத்தை வழங்கி அமைச்சர் றஊப் ஹக்கீம் சாதனை புரிந்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி நமது மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி மக்கள் பயன்டுத்தக் கூடிய வகையில் செயல்படாமல், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக அம்பாறை மாவட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் பணி புரியும் ஊழியர்களுக்கு வெளிமாவட்டங்களுக்கு அவசர இடமாற்றங்களை வழங்கி அமைச்சர் றஊப் ஹக்கீம் சாதனை புரிந்துள்ளார் என கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், தேசியகாங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
பொத்துவில் பசறிச்சேனை கிராமத்தில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் கட்சியின் கிளைப் புனரமைப்புக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
மறைந்த பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுடன் இணைந்து நமது கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவின மக்களுக்கும் பெரும் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் வரலாற்றில் அதிகமான முஸ்லிம்களுக்கும், கனிசமான தமிழ் சகோதரர்களுக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்கினார். அமைச்சர் அதாஉல்லா நீர்வழங்கல் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனது அமைச்சின் உச்ச அதிகாரத்தை பாவித்து விசேடமாக கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் விசேட நீர்வழங்கல் திட்டங்களை அவசரமாக உருவாக்கி நமது மக்களுக்கான நீரினை வழங்கினார். நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் முஸ்லிம், தமிழ் மக்களுக்கும் பெருந் தொகையான நியமனங்களை வழங்கினார். தனது அரசியல் அதிகாரத்தில் ஊடாக கிழக்கில் வாழும் மூவின மக்களின் இன ஒற்றுமைக்கு பெரும்பங்காற்றினார். கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டு கிழக்கில் வாழும் மூவின மக்களும் நிரந்தரமாக நிம்மதியாக வாழும் சூழ்நிலைக்காக தைரியமாக குரல் கொடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 03வது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 18ஆவது சரத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசாங்கத்தில் அத்தனை சுகபோகங்களையும் அனுபவித்து விட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு 07 தினங்களுக்கு முன் புதிய அரசியல் கூட்டணியுடன் இணைந்து கொண்டவர்கள். நல்லாட்சி என்ற போர்வையில் தங்களின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவைகள் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
கிழக்கு மாகாண சபையில் நானும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அப்துல் மஜீதும், பொத்துவில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இணைந்தே குரல் கொடுத்தோம். சென்ற 2012ம் ஆண்டில் நடை பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் பொத்துவிலில் இருந்து மாகாண சபை உறுப்பினர் அப்துல் மஜீட் கிழக்கு மாகாண சபைக்கு போகக் கூடாது என்பதற்காக திட்டமிட்ட முறையில் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களினால் தோற்கடிக்கப்பட்டார்.
அப்துல் மஜீதை அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களே தோற்கடித்தனர். அதே போன்றுதான் முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளி கல்முனை (றசாக்) ஜவாத்தும் தோற்கடிக்கப்பட்டார். என்ற யதார்த்தத்தினை பொத்துவில் மக்கள் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
சென்ற அரசாங்கத்தில் 09 மாகாண சபை ஆளுனர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். புதிய அரசாங்கம் சகோதரர் அப்துல் மஜீதுக்கு ஆளுனர் பதவி வழங்க உள்ளதாக அறிவித்த போது மகிழ்ச்சி அடைந்தோம் அதனைக் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தடை செய்துள்ளனர். இலங்கையில் ஒரு முஸ்லிம் ஆளுனர் இல்லாத நிலமை தற்போது ஏற்பட்டுள்ளதனால் முழு முஸ்லிம் சமூகமும் கவலைப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது,
தேசிய காங்கிரஸும், தலைமையும் வெளிப்படையாகவே அரசியல் செய்கின்ற ஒரு கட்சியாகும், தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் பொய் வாக்குறுதிகளை ஒரு போதும் தேசிய காங்கிரஸ் வழங்குவதில்லை. கட்சியினால் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தை கௌரவமான முறையில் கடந்த காலங்களில் செயற்படுத்திக் காட்டியுள்ளோம்.
நடைபெற்றுள்ள பல பொதுத் தேர்தல்களிலும், இரண்டு தடவைகள் நடை பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களிலும் தேசிய காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டவர்களாக தேசிய காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வாக்குப்பலம் பயன்படுத்தப்பட்டு, அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படும் என நீண்ட காலமாக முஸ்லிம் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டு வந்த சகோதர கிராமங்களுக்கும் அரசியல் அதிகாரங்களை வழங்கியுள்ள வரலாறு தேசிய காங்கிரஸ் தலைமைக்கு மாத்திரமே நமது நாட்டில் உள்ளது என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறந்த அரசியல் தலைவன் திறமை வாய்ந்தவர்களையும் , நல்லவர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களை நல்ல காரியங்களுக்கு பொறுப்பாக நியமிப்பதனால்தான் அரசியல் பயனங்கள் விரிவடைந்து மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுகிறது.
தேசிய காங்கிரஸை இனிமேல் யாரும் உரசிப்பார்க்க தேவையில்லை. தேசிய காங்கிரஸின் கடந்த கால செயற்பாடுகள் ஊடாக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பொத்துவில் பிரதேச அரசியல் அதிகாரம் தொடர்பாக பொத்துவில் சமூகம் ஒன்றிணைந்து நல்ல தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய கால கட்டத்திற்கு வந்துள்ளோம். இந்த சந்தர்ப்பத்தையும் பொத்துவில் சமூகம் தவறினால் இன்னும் 06 வருடங்களுக்கு நாம் வருந்த வேண்டி வரும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.

Post a Comment