மன்னார் வங்காலை அக்கினேஸ்புரம் கிராமத்திலுள்ள வீடொன்றிற்குள் மதுபோதையில், சிவில் உடையில் சென்ற பொலிஸார் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில், 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதாக தெரிவித்தே பொலிஸார் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவர் தெரிவித்ததோடு, அங்கு ஏற்கனவே மதுவிற்பனை இடம்பெற்றதாகவும், பொலிஸாரின் சட்ட நடவடிக்கையின் பின்னர் அது நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுபோதையில் வந்த இரு பொலிஸார் வீட்டிலுள்ள தாய் மற்றும் மகளை கண்மூடித்தனமாக தாக்கி வங்காலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். இவர்களை பார்வையிடச் சென்ற 18 வயதான பாடசாலை மாணவன் ஒருவரும் தாக்கப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடுமையான காயங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவி, கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியிலேயே வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தாலும், இரு பெண்களை கடுமையாக தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றமை அப்பகுதி மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து அண்மைய காலமாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறானதோர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

Post a Comment