சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்க முயன்றனர் என சந்தேகிக்கப்படும் இரு பொலிஸ் உயரதிகாரிகளிடம் புலனாய்வுப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தப் படுகொலை தொடர்பான விசாரணைகளின்போது வெளியான முக்கிய சில தகவல்களை அப்போது பதவியிலிருந்த இவ்விரு பொலிஸ் உயரதிகாரிகளும் மூடி மறைத்தனர் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதியப்பட்டுள்ளன என புலனாய்வுப் பொலிஸின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் இருந்த சில பக்கங்கள் காணாமல்போயுள்ளன எனவும், அப்பக்கங்களைக் கழற்றிச் சென்றனர் என்று சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் பற்றி தகவல்ககள் கிடைத்துள்ளன எனவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார் எனவும் தெரியவருகின்றது.
முன்னைய மகிந்த அரசால் மூடிமறைக்கப்பட்ட இந்தக் கொலை விவகாரத்தைத் துருவி விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தற்போதைய அரசு முனைப்புடன் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment