மனநிலை பாதிக்கப்பட்ட தாய் மருத்துவமணையில்! பொலிஸ் விசாரணை!!
( நமது விசேட நிருபர் )
நிந்தவூர்-14ம் பிரிவு, மௌலானா வீதியில் வசித்து வந்த மனநிலை பாதிக்கப்பட்ட தாயொருவர் தான் பெற்ற, ஒன்பது மாத இரட்டைக் குழந்தைகளை ஒரே நேரத்தில் வெட்டிக் கொலை செய்த பரிதாப நிகழ்வொன்று அண்மையில் நிந்தவூரில் இடம் பெற்றுள்ளது.இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:-
கிண்ணியாவைச் சேர்ந்த கியாவுடீன் அஸ்மத் அனீசா என்பவரே இவ்வாறு தான் பெற்ற இரட்டைக் குழந்தைகளை பரிதாபகரமாகக் கொன்றவராவார்.
கிண்ணியாவைச் சேர்ந்த அனீசா(வயது-26) நிந்தவூரைச் சேர்ந்த அலியார் சியாதுல்ஹக்(வயது-36) என்பவரை கடந்த 04 வருடங்களுக்கு முன்னர் திருமணஞ் செய்து, மணமகன் வீட்டில்(நிந்தவூரில்) வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்குப் பிறந்த சியாதுல் ஹக் உபைத்துல்லாஹ்(வயது-02) ஆண் குழந்தையொன்று கடந்த இரு வருடங்களுக்கு முதல்(25.11.2017) வீட்டில் பாவிக்கப்பட்டு வந்த சலவை இயந்திரத்திற்குள் விழுந்து மறணமடைந்துள்ளார்.
இந்நிகழ்வால் மனநிலை பாதிக்கப்பட்ட அனீசா, இரு தடவைகள் தன்னைத் தானே கொல்லும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவரைக் காப்பாற்றி, அதற்கான சிகிச்சைகளை வழங்கியதன் மூலம் அனிசாவைக் காப்பாற்றித் தேற வைத்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதன் பின்னர் அனீசா-சியாதுல் ஹக் என்பவர்களுக்கு 'அயினா-செயினப்' எனும் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஒன்பது மாதங்களைப் பூர்த்தி செய்து, பத்தாம் மாதத்திற்குள் கால்பதிக்கும் இக்குழந்தைகள் இருவருமே இன்று காலை அத்தாயினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்த போது, குழந்தைகள் இருவரையும் குளியலறைக்குள் கொண்டு சென்று, கொன்றிருக்கிறார் என பொலிசார் தெரிவிக்கின்றனர். சடலங்கள் இரண்டும் குளியலறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மீண்டும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டுள்ளதாகவும் எமது விசேட பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment