( நமது விசேட நிருபர் )
நிந்தவூரில் காட்டு யானை தாக்கி 14 வயதுச் சிறுவன் பரிதாபகரமாக மரணமான சம்பவமொன்று நிந்தவூர் நெல்வயல் பகுதியில் அமைந்துள்ள பரவட்டப்பிட்டி, பனையடிவட்டையில் இன்று(30) இடம் பெற்றுள்ளது.
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் ஆண்டு 9ல் கல்வி பயின்று வந்த முஹம்மது ஜாபீர் முஹம்மது முன்சிப் (வயது 14) என்பவரே யானைத் தாக்கத்திற்கு உள்ளாகி மரணத்தைத் தழுவியுள்ளவராவார்.
மேலும் இதுபற்றித் தெரியவருவதாவது:-
பி.ப.2.00 மணிக்குப் பாடசாலை கலைந்து வீடு வந்த மாணவன் பகற் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, பாடசாலை மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடப் போவதாக தனது தாயிடம் பொய்யைச் சொல்லி விட்டு, பாடசாலை நண்பர்களுடன் வயல் வெளியில் வந்து நிற்கும் யானைக் கூட்டத்தைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.
ஆத்திரங் கொண்ட யானை துரத்தியபோது பாடசாலைச் சிறுவர்கள் சிதறுண்டு ஓடித் தப்பியுள்ளனர். மரணமடைந்த முன்சிப் எனும் மாணவனைத் துரத்திச் சென்ற யானை அவரைகக் கோபங் கொண்டு தாக்கியதில் அவரது தலைப்பகுதியும், உடல் பாகங்களும் சிதைவடைந்த நிலையில் மறணித்துள்ளார்.
இச்செய்தியை அறிந்த சம்மாந்துறைப் பொலிசாரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நிந்தவூரிலிருந்து சுமார் 3.5 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பரவட்டப்பிட்டி பனையடிவட்டையிலிருந்து மாணவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பிரதே அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஐ.நஸ்றுல் இஸ்லாம் அவர்களினால் பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டதோடு, சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நவ்பர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
'யானையின் தாக்குதலினால் தலையிலும், உடல் பாகங்களிலும் ஏற்பட்ட கடுங்காயங்களினாலும், இரத்தப் பெருக்கினாலும் ஏற்பட்ட மரணம் எனத் தீர்பளித்து' பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஐ.நஸ்றுல் இஸ்லாம் இரவு 11.00 மணிக்கு ஜனாசாவை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இரவு 12.மணியளவில் நிந்தவூர் மஸ்ஜிதுல் றவாஹா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இம்மாணவனின் சடலத்தைக் கண்டு பிடித்து மீட்பதற்கு உதவிய சம்மாந்துறைப் பொலிசார், திடீர் மரண விசாரணை அதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், வன இலாகா அதிகாரிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், நிந்தவூர் ஜனாசா நலன் புரிச் சபையினர், நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊர் நலன் விரும்பிகள், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், அழைக்காமல் வந்து உதவியோர் அனைவருக்கும் மறணித்த மாணவனின் பெற்றோர்களான முஹம்மது ஜாபீர்-சாகுல் ஹமீது ஹைறுன்னிசா ஆகியோர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Post a Comment