
( நமது நிருபர் )
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலை அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவ்வாசிரியரின் எதிர்பாராத் தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
குறித்த ஆசிரியர் 08 வருடங்களைப் பூர்த்தி செய்த நிலையில் 2018.01.02ந் திகதிய இடமாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாலும், உள்ளுராட்சித் தேர்தலை அடுத்து இவர்களுக்கான இடமாற்றம் உடன் வழங்கப்படவுள்ளதாலும் இவருக்கு நேரசூசியோ, வேலைப் பகிர்வுகளோ எதுவும் வழங்கப்படவில்லையாம்.
இதனால் மனமுடைந்து போன ஆசிரியர் அதிபரிடம் நெருங்கி, தனக்கு நேரசூசி வேண்டும். நான் படிப்பிக்க வேண்டும். நேரசூசியைத் தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.
அதிபர் மேற்குறிப்பிட்ட காரணங்களைக் காட்டி ' உங்களுக்கு நேரசூசி வழங்க முடியாது' என மறுத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரத்திற்கு உள்ளான ஆசிரியர் அதிபர் அறையினுள் போடப்பட்டிருந்த இரும்புக் கதிரை ஒன்றைத் தூக்கி அதிபரை நோக்கி வீசியடித்துள்ளார். இதனால் அதிபரின் வலது கையும், விரலொன்றும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதே வேளை அதிபர் மேசையின் மேல் போடப்பட்டிருந்த கண்ணாடிகளும், சில பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பாடசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவங்கள் நடைபெறும் போது இப்பாடசாலையில் நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரியான திருமதி.ஜிஹானா அலீப் எனும் பெண் உத்தியோகத்தரும் இருந்துள்ளார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளில் இவரும் ஒருவர் எனப் பேசப்படுகிறது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் சம்மாந்துறைப் பொலிசாராலும், கல்முனை வலயக் கல்விக் காரியாலய அதிகாரிகளாலும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது.
இந்த விடயத்தில் கல்முனை வலயக் கல்விக் காரியாலய அதிகாரிகள், மாகாணக் கல்விப் பணிப்பாளர், பொலிசார், என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்பதைப் பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர் எனப் பல மட்டத்திலுள்ளோரும் மிக அவதானத்துடன் அவதானித்திருக்கின்றனர்.
Post a Comment