இஸ்லாம் மார்க்கத்துக்கும் எமது நாட்டுக்கும் பொருந்தாத திருமண வைபவம் என கடந்த வாரம் கொழும்பு BMICH ல் நடைபெற்ற முஸ்லிம் விவாக விருந்துபசார வைபவத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கூறுகையிலேயே மேற்கண்டவாறு இலங்கை அதிபர் மைத்திரி பால சிரிசேன தெரிவித்தார்.
இத்திருமண விழாவுக்கென அரசியல் பிரமுகர்கள், உலமாப்பெருமக்கள், பிரபல தொழிலதிபர்கள் என அழைக்கப்பட்டிருந்தனர்.
மணமகளின் தாய் அணிந்திருந்த ஆடை இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பெறுமதி இருபது இலசட்சம் ரூபா எனவும் சொல்லப்படுகிறது.
அப்போ மணமகளின் ஆடை அணிகலன்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? மணமகனுக்கான சீதனம் சுமார் 15 கோடி என்பதுதுடன், இந்த ஆடம்பர திருமண வைபத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையில் அங்கம் வகிக்கும் முக்கியமான ஒருவரே திருமண உரையை ஆற்றியதாகவும் அறியக்கிடக்கின்றது.
குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத்தெரிவிக்கையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேன இந்த விவாக விழா இஸ்லாமிய கலாசாரத்துக்கும் இலங்கை போன்ற ஏழை நாட்டுக்கும் பொருந்தாத ஒன்று எனக்குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவை லக்சு உயன எனும் கிராமத்தில் நடுத்தர விவசாயக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இலங்கை அதிபர், குறித்த நகை வியாபாரியின் மகளின் திருமண விருந்துபசார நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிபான வகைகளைப் பார்த்து ஆடிப்போனாராம்.
இலங்கை வாழ் இஸ்லாமிய புரூணை சுல்தான்களுக்கும், இந்திய அம்பானிகளுக்கும், அமெரிக்க பில்கேட்ஸ்களுக்கும் நாம் சொல்வதெல்லாம் நீங்கள் வாழும் அகச்சுழலை மட்டும் பார்த்து விட்டு உலகை, நாட்டைக் கணிப்பிடாது எங்கள் மாவட்ட எல்லைக்கிராமங்களுக்கும் வந்து பாருங்கள். இங்கே விவசாயிகள், சிறுதோட்டத் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், காடுகளுக்குள் சென்று விறகு முறிப்பவர்கள் என அன்றாட ஜீவனோபாயத்துக்காக யுத்தம் செய்பவர்களையும், பசியை உணவாக உட்கொள்பவர்களையும் உங்களால் காண நேரிடும். அவ்வாறில்லையெனில், நாங்கள் உங்களை அழைத்துச்செல்கிறோம்.
பெருமைக்காக கோடிகளைக் கொட்டி திருமண விருந்து வைப்பவர்கள், பணத்தைப் பொருளை வீண் விரயமாக்குபவர்கள் ஒன்றைப் புரிதல் நன்று. உங்களைப்போன்றவர்கள் பார்த்து விட்டு “மூண்ட மெச்சர சல்லி கொஹேந்த Bபங் அபே அயகென் சுறா கபு எக தமா” என்று அன்னிய மதத்தினர் சொல்வது நம் காதுகளுக்கு கேட்கிறது. பணம் படைத்த உதாரிகளே, உலோபிகளே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அவனின் பிடி மிகக்கடினமானது. நீங்கள் இளைக்கும் தவறு உங்கள் சந்ததியைப் பிச்சை வாங்க வைத்து விடும்.
நன்றி கல்குடாநேசன்.

Post a Comment