-அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதம அதிதி-
இலங்கையின் முதலாவது தொற்றா நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை நேற்று (28) நிந்தவூர் அரசடித்தோட்டப் பிரதேசத்திலுள்ள சுகாதார மத்திய நிலையக் கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஆயுர்வேத ஆராச்சி நிலையப் பணிப்பாளர் டாக்டர்.கே.எல்.எம்.நதலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆயூர்வேத ஆராய்'ச்சி வைத்தியசசாலையைத் திறந்து வைத்தார்.
மேலும் இவ்விழாவில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரீப் சம்சுதீன், கே.எம்.அப்துல் றசாக், ஐ.எல்.எம்.மாஹீர், ஏஎல்.தவம், சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜன 10 சந்திரகுப்த உள்ளிட்ட அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும், ஆயிரக் கணக்கான பொது மக்களும், பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
ஆராய்ச்சி வைத்தியசாலையைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டமொன்றும் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் நிந்தவூர்ப் பிரதேசத்தில் இவ்வருடம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் புத்தகப் பைகள் வழங்கப் பட்டதோடு, சகல பாடசாலை அதிபர்களுக்கும் பாடசாலை மூலிகைத் தோட்டத்திற்கான மூலிகைத் தாவரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியில் பிரதியமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரீப் சம்சுதீன், கே.எம்.அப்துல் றசாக், ஐ.எல்.எம்.மாஹீர், ஏஎல்.தவம், சிப்லி பாறூக், சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜன 10 சந்திரகுப்த ஆகியோர் பொன்னாடைகள் போற்றி, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் கருத்துத் தெரிவிக்கையில்:-' இன்று நிந்தவூரில் திறந்து வைக்கப்படடுள்ள ஆயுர்வேத ஆராய்ச்சி மருத்துவ நிலையமானது நிந்தவூர் மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இது இந்தக் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள அனைத்து மூவின மக்களுக்கும் சொந்தனதாகும். இப்பிரதேசத்திலள்ள அனைத்து மக்களும் இதன் மூலம் நன்மையடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது அமைக்கப்படுகிறது. இதற்காகப் பாடுபட்ட சுகாதார பிரதியமைச்சரை நான் பாராட்டுகின்றேன்' எனத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில்:-' மறைந்த தலைவர் அஷ்றப் அன்று எவ்வாறு அபிவிருத்தியை ஒரு புறமும், மறுபுறம் உரிமைக்கான போராட்டத்தை எவ்வாறு எடுத்துச் சென்றார்களோ, அதே போன்று இன்றுள்ள எமது தலைவர் ஹக்கீமும் ஒரு புறம் அபிவிருத்திப் பணியைச் செய்து கொண்டு, மறுபுறம் நமக்குத் தெரியாமலே நமது முஸ்லிம் காங்கிறஸ் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அடைந்து கொள்ளும் பொருட்டு, எந்த வித விட்டுக் கொடுப்புக்களுமின்றி, நமக்கான ஒட்டு மொத்த உரிமைகளையும் பெறுவதற்கான காய் நகர்த்தல்களை மிகக் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் நமது தலைமையைப் பலப்படுத்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசீம் கருத்துத் தெரிவிக்கையில்:-' முஸ்லிம் காங்கிரஸ் நாடு தழுவி ஒரு கட்சி. ஒரு பேரியக்கம். இதனை யாரும் அழிக்க முடியாது. அன்று சிலர் தலைமை மாற வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த சமூகத்தில் இந்த ஹக்கீமைப் போன்ற ஒரு தலைவரை நான் இன்னும் காணவில்லை. இந்தக் கட்சிக்காக இந்தத் தலைவர் படும் கஷ்டங்கள், இன்னல்கள் மக்களுக்குத் தெரியாது. ஆனால், எங்களுக்குத் தெரியும். மக்கள் மத்தியில் நின்று பேசத் தைரியமற்ற சிலர்தான் இன்று தலைமை மாறவேண்டும் என்று விமர்சிக்கின்றனர்.' எனத் தெரிவித்தார்.
ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மத்திய அரசிலும், மாகாண அரசிலும் மிகப் பலமான நிலையில் இருக்கிறது. இதனைப் பலவீனப்படுத்தும் வேலைகளைக் கட்சிக்குள் இருப்பவர்கள் செய்வதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இது ஆபத்தானது. இந்த நேரத்தில்தான் நம்பிக்கையின் அடிப்படையில் நாம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. இன்று மாகாண முதலமைச்சர் மிகத் தைரியமாகவும், துணிச்சலாகவும் செயலாற்றுகிறார் என்றால் நமது உறுப்பினர் 07 பேரும் ஒற்றுமையாக இருப்பதுதான் காரணம். ஆதற்கு மேலும் 02 உறுப்பினர்கள் பலம் சேர்த்துள்ளனர். சகோதரர்கள் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், பொறியிலாளர் சிப்லி பாறூக் அவர்கள் இருவரையும் நான் பாராட்டுகிறேன். முஸ்லிம் காங்கிரசின் முன்னேற்றத்தைப் பொறுக்க முடியாதவர்கள் இன்று புத்தகம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று எல்லாக் கட்சிகளுக்குள்ளும், ஏன் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என்றுள்ள பெரும் பெரும் கட்சிகளுக்குள்ளும் தனிநபர் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் விதிவிலக்கல்ல! இந்தத் தேசிய இயக்கத்தை கூறுபோட்டு அழிப்பதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாது' எனத் தெரிவித்தார்.
Post a Comment