-பிரதியமைச்சர் பைசால் காசீம், மாகாண அமைச்சர் ஏஎல்எம். நஸீர் பங்கேற்பு-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையிற்கு ரூபாய் ஒரு கோடி பெறுமதியான அத்தியவசிய மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும், கல்முனைப் பிராந்தியத்திலுள்ள தளவைத்தியசாலைகளுக்கு ரூ.10 மில்லியன் பெறுமதியான பொருட்களுக்கான நிதி தொடர்பான விபரக்கோவைகள் வைத்திய அத்தியட்சகர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் நேற்று நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.
வைத்திய அத்தியட்சகர் திருமதி.சஹிலா றாணி இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, வைத்திய உபகரணங்களைக் கையளித்து, சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உபதலைவர் ஏ.நசீர் அகமட், வைத்திய அதிகாரிகள், மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பொத்துவில், கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.10 மில்லியனுக்கான பொருட்பதிவேடுகளும் வைத்திய அத்தியேட்சகர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- கடந்த வருடம் அரசாங்கம் அதிகளவான நிதியினை சுகாதார அமைச்சுக்கும், கல்வி அமைச்சுக்குமே ஒதுக்கீடு செய்திருந்தது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட முடியாமல் கலைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தான் நாம் எமது பிரதேச வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த வேண்டுமென்றும், வைத்தியர்களின், தாதியர்களின், ஏனைய உத்தியோகத்தர்களின் ஆளணியினரை அதிகரிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம். இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக தற்போது முடிந்துள்ளன. விரைவில் பிரச்சினைகள் காணப்படும் பொத்துவில், நிந்தவூர், சம்மாந்துறை போன்ற வைத்தியசாலைகளின் ஆளணிப் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும்' எனத் தெரிவித்தார்
Post a Comment