-அமைச்சர்கள் றிசாட்,
பைசர் முஸ்தபா
அதிதிகள்-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சாய்ந்தமருது பிரதான வீதியில் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் 8வது புதிய கிளை நேற்று(21) இரவு 10 மணியளில் திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத் தாபனத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும், வர்த்தகக் கைத்தொழில் அமைச்சருமான றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் 8வது புதிய கிளையைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், கனிய வளங்கள் கூட்டுத் தாபனத் தலைவருமான எம்.ஏ.அப்தல் மஜீட், முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வீ.சி.இஸ்மாயில், அசோக் லங்கா நிறுவனத் தலைவர் சிராஸ் மீராசாஹீப்;, உள்ளுர் அரசியல்தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள் எனப்பலரோடு, பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திறப்பு விழாவைத் தொடர்ந்து பொதுக் கூட்டமொன்றும் இடம் பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா 'சாய்ந்தமருது பிரதேசத்தை ஒரு அதிகாரமுடைய தனிச்சபையாக மாற்றுகின்ற விடயமாக என்னைப் பல அரசியல்வாதிகள் சந்தித்து, பைல் தந்து போட்டோ பிடித்துச் சென்றுள்ளனர். அவையெல்லாம் புகைப்படங்களைப் பத்திரிகைகளில் போட்டு,மக்களை ஏமாற்றுவதற்கே. ஆனால், அமைச்சர் றிசாட் அவர்கள் மட்டும் என்னிடம் இந்த சாய்நதமருது மக்களது பிரச்சினைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லி, இதனைச் செய்துதர வேண்டுமென்று இதய சுத்தியுடன் கேட்டிருக்கிறார். நிச்சயமாக நான் இதனைச் செய்து தருவேன்' எனத் தெரிவித்தார்.
அமைச்சர் றிசாட் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்:- '16 வருடங்களாகப் பறக்கனிக்கப்பட்டிருந்த இந்த அம்பாரை மாவட்ட மக்களின் பல்வேறு தேவைகளையும், உரிமைகளையும் வென்று கொடுப்பதற்கான தூய்மையான பணியில் இன்று இறங்கியுள்ளோம். இந்த சமூகம் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழவேண்டு மென்று கனவு கண்டு செயற்பட்ட அஸ்ஸஹீத் மர்ஹூம் அஸ்றப் வழியில் பயணித்து வெற்றி வாகை சூடுவது நிச்சம்' எனத் தெரிவித்தார்.
அமைச்சர் றிசாட் பதியுதீன், அமைச்சர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா போன்றோருக்கு ஊர்மக்கள் சார்பாக சாய்ந்தமருது பெரிய ஜூம்மாப் பள்ளிவாசல் தலைவரினாலும், பல சமூகசேவை அமைப்புக்களின் தலைவர்களினாலும் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள, வாழ்த்து மடல்கள் என்பன வழங்கி, கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், சாய்ந்தமருது கடற்கரை வீதியோரத்தில் பெண்களுக்கான புதிய சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல்லும் இரு அமைச்சர்களாலும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment