விழித்தெழும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள்


இலங்கையின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றது. புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் போன்றவைகளில் கவனம் செலுத்தப்படுகின்றன. இவ்விடயங்கள் குறித்து நேர் மற்றும் எதிர்மறைக் கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆயினும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறை, முஸ்லிம்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் குறித்து போதிய கரிசனை காட்டாதிருக்கின்றார்கள். அரசாங்கம் முஸ்லிம்களுக்குரிய அரசியல் தீர்வினையும், முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர் தொகையை பாதுகாத்துக் கொள்வதற்கும், ஏனைய பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளையும்; தங்கத் தட்டில் வைத்து தருமென்று முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள சிவில் அமைப்புக்கள் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார, சமூக விழும்மியங்களில் அக்கறை செலுத்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீது நம்பிக்கை இழந்துள்ளமைதான் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் சமூக விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு காரணமாகும்.


நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தினாலும், பௌத்த இனவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளினாலும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் பெருந் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். மதவிழும்மியம் தொடர்பில் நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் மதச் சுதந்திரம் பாரிய சவால்களுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புடன் செயற்படாத சோம்பேறித் தன்மையையே காணக் கூடியதாக இருக்கின்றது.


இலங்கைக்கு பல நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நாவின் பிரதிநிதிகளும் வருகை தருகின்றார்கள். ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுத் தருமாறு கோரிக்கைகளை ஆவண ரீதியாக முன் வைக்கவில்லை. அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அமைவாக சமூகத்தை வழி நடத்துவதற்கும், சுகபோகங்களை அனுபவித்துக் கொள்வதற்குமே முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், தமது வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் நம்புவதனை குறைத்துக் கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்திருப்பது மிகப் பெரிய ஆபத்தாகும். இதனால், முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் சமூகத்தின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாகும்.


அந்த வகையில் சுசுவு (சுயினை சுநளிழளெந வுநயஅ) எனும் அமைப்பு இலங்கைக்கு 10 நாள் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயாவை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் (10.10.2016) சந்தித்துள்ளது. இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை அவ்வமைப்பு மேற்கொண்டுள்ளது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இப்பேச்சுவார்த்தையின் இறுதியில் அறிக்கை ஒன்றினை ரீட்டா ஐசாக் நதேயாவிடம் இந்த அமைப்பினர் வழங்கியுள்ளார்கள். முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள். ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வருகை தந்த போது முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய ஆவண அறிக்கை ஒன்றினை மு.காவின் செயலாளர் ஹஸன்அலி வழங்கியிருந்தார். இந்த அறிக்கையால் கடந்த அரசாங்கம் திக்குமுக்காடியது. அவர் எங்களுக்கு தெரியாமல் வழங்கிவிட்டார் என்று அன்றைய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிடம் ஹஸன்அலி காட்டிக் கொடுக்கப்பட்டார். ஹஸன்அலியின் அந்த அறிக்கையின் பின்னர் ஐ.நாவின் அதிகாரி ஒருவரிடம் முஸ்லிம் சமூகத்தின் அதிகபட்ச பிரச்சினைகளை உள்ளடக்கியதொரு அறிக்கையாக சுசுவு எனும் அமைப்பினரின் அறிக்கை அமைந்துள்ளது.

முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் சமூகத்தின் மீது அக்கறை காட்டாது வேறு விவகாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் அரசாங்கத்திற்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் எச்சங்களை இழந்து விடக் கூடாதென்ற இழிநிலை அரசியலையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சர்வதிகாரப் போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சமூகம் சார்ந்த கேள்விகளை கேட்கின்றவர்களை கட்சியிலிருந்து தூரமாக்குவதற்கும், விலக்கி வைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், முஸ்லிம் கட்சிகளின் உயர்பீடங்கள் மௌனிகளின் சபையாக உள்ளது. அச்சபைகளில் உள்ள மௌனிகள் தலைமையினால் தங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் கூனிகளைக் கூட இழக்கக் கூடாதென்பதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு தீங்காக அமையுள்ள விடயங்களை சரியென்று விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறுபான்மையினரின் நன்மை கருதி எதிர்த்த சட்ட மூலங்களான அவசர கால சட்டம், திவிநெகும, 18வது சட்ட மூலம் போன்றவைகளுக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்தன. 18வது திருத்தச் சட்டத்திற்கு கைகளை உயர்த்துவதற்குரிய சன்மானங்களை திரைமறைவில் பெற்றுக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு படுகுழியில் விழுந்ததாக சொல்லி மக்களை ஏமாற்றினார்கள்.


இன்றைய அரசாங்கத்தில் கூட முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நடவடிக்கைகள் எரியும் வீட்டில் எதனை எடுத்துக் கொள்ளலாம் என்பதாகவே இருக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் அரசியல் தலைவர்களைப் போன்று செயற்பட முடியாது. கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் பலவும் மௌனமாகவே செயற்பட்டன. ஒரு சில அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்தின் அன்றைய பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தன. நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. அந்தவகையில் சுசுவு எனும் அமைப்பு முஸ்லிம் சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்துள்ளது.


சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயாவை சந்தித்த சுசுவு எனும் அமைப்பினர் இலங்கை முஸ்லிம்களுக்கு கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்நடவடிக்கைகள் இன்றைய அரசாங்கத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு சட்டத்தின் உதவியை நாடும் போது அதிகார துஸ்பிரயோகங்கள், சட்ட மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்கள்.


2014ஆம் ஆண்டு பொதுபல சேனவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட அளுத்கம வன்செயல்கள் குறித்து அரசாங்கம் இன்னும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் போது இருவர் உயிர் இழந்துள்ளார்கள், முஸ்லிம்களுக்கு பல கோடி ரூபா நஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் தொடர்பில் பூரண விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இதற்கொரு ஆணைக்குழு நியமிகக்ப்பட வேண்டுமென்றும் சுசுவு எனும் அமைப்பினர் ரீட்டாவிடம் தெரிவித்துள்ளார்கள்.


2012ஆம் ஆண்டு பௌத்த இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான தம்புள்ள அல்-ஹைரிய்யா பள்ளிவாசல் தாக்கப்பட்டது. இப்பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்குரிய எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிக்கின்றன. பள்ளிவாசல் அமைந்துள்ள காணியை விட்டுக் கொடுப்பதாக இருந்தால் எங்களுக்கு பொருத்தமான காணி வழங்கப்பட வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஐ.நா இப்பிரச்சினைக்கும் விரைவில் தீர்வினைப் பெற்றுத் தர வேண்டுமென்று கேட்டுள்ளார்கள்.


புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வு அவசியமாகும். முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் நடவடிக்;கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. எல்லை நிர்ணயங்கள் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் அமையக் கூடாதெனவும் சுசுவு எனும் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள்.


புதிய அரசியல் யாப்பில் தேர்தல் மறு சீர்திருத்தம் என்பதும் அடங்குகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு சில விசேட எற்பாடுகளை செய்து தொகுதிவாரி தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடையும். ஆதலால், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு விகிதாசார தேர்தல் முறையே தொடர்ந்தும் நடைமுறையில் இருக்க வேண்டும். இத்தேர்தல் முறையில் உள்ள குறைகளை நீக்குவதற்கு விசேட ஏற்பாடுகளை செய்வதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும். ஆனால், முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் தேர்தல் முறைக்கு ஆதரளிக்கும் செயற்பாடுகளுக்குரிய ஆரம்ப வேலைகளை முஸ்லிம்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளார்கள். தொகுதிவாரி முறையில் தாங்கள் வெற்றி பெறக் கூடிய வகையில் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்து விட்டு முஸ்லிம் சமூகத்தை நட்டாற்றில் விடுவதற்கே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது விடயத்தில் முஸ்லிம்களின் அதிக ஆதரவைப் பெற்றுள்ள மு.கா பொறுப்புடன் நடந்து கொள்ளல் வேண்டும்.

கடந்த 08.10.2016 கொழும்பில் மு.கா ஒரு அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றினை நடத்தியது. இதன் போது உத்தேச தேர்தல் சீர்திருத்தம் பற்றியதொரு ஆசோலனை ஆவணத்தையும் மு.கா அன்று வெளியிட்டுள்ளது. அதில் 196 தேர்தல் தொகுதிகள் அமைக்கப்பட வேண்டுமென்றும், 33 பேர் தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றும், பாராளுமன்ற உறுப்பினர்களின் முழுத் தொகை 235ஆக அமைய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை மு.கா தொகுதிவாரி தேர்தல் முறையை ஏற்றுக் கொள்ளப் போகின்றது என உணர முடிகின்றது. தொகுதிவாரி தேர்தல் முறையில் எந்த விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பாகவே அமையும். இதில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள்தான் பாதிக்கப்படுவார்கள். தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டுமென்பது முக்கியமல்ல. முஸ்லிம் சமூகம் தோல்வி அடையக் கூடாது.

ஆதலால், சுசுவு எனும் அமைப்பினர் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று கவனம் செலுத்தியிருப்பது மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கையாகும். அத்தோடு, புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்; தனியார் சட்டம் இடம்பெறுமா என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டிருக்கின்றது. தாங்கள் வெற்றி பெறுவதற்கு தேர்தல் தொகுதிகளை அமைத்துக் கொள்வதற்கு பேரினவாதிகளின் கால்களில் விழுந்து கிடக்கும் தலைமைகள் இதனைப் பற்றி கவலை கொள்வதாகத் தெரியவில்லை. இதனால், சுசுவு எனும் அமைப்பினர் முஸ்லிம் தனியார் சட்டம் குறித்தும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தோடு மும்மானை முஸ்லிம் பாடசாலை மைதானப் பிரச்சினை, எல்லை நிர்ணயம், பாத்தியா மாவத்தை மற்றும் பொரலஸ்கமுவ பள்ளிவாசல்கள் பிரச்சினைகள், ஏனைய பள்ளிவாசல் மீதான தாக்குதலகள்; பற்றியும், பெண்களை காதி நீதிபதிகளாக நியமிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறுப்பு பேச்சுகள் குறித்தும் பேசியுள்ளார்கள்.


இவ்வாறு முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ள போதிலும், வடமாகாண முஸ்லிம்களினது மீள்குடியேற்றப் பிரச்சினை, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி பேசியதாகவோ, அறிக்கையில் உள்ளடக்கியதாகவோ அறிய முடியவில்லை. ஆயினும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைமைகளும் சமூகத்தை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கையில் சுசுவு எனும் அமைப்பினர் இந்தளவிற்காவது சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை பாராட்டுக்குரியது.


இதே வேளை, கொழும்பை மாத்திரம் மையப்படுத்தி செயற்பட்டு வந்த தேசிய ஷுறா சபை தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. இந்த அமைப்பினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து வருகின்றார்கள். தற்போது முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளின் வடிவங்களையும், அதற்கு யார் காரணமென்றும் விளக்கங்களை அளித்துக் கொண்டு வருகின்றார்கள். தேசிய ஷூறா சபை முஸ்லிம்களின் பிரச்சினைகளை புள்ளிவிபர ரீதியாக ஆவணப்படுத்திக் கொண்டு வருவது சிறப்பம்சமாகும்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.