கதிர்காமம் புனித பூமியை தொடப் போகிறது புகையிரதம்





குபுக்’, ‘குபுக்’ என்று புகைக்கும் என்ஜின் ஒன்று பத்து ரயில் பெட்டிகளை இழுத்தபடி 1865 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் 84 பயணிகளுடன் கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது அதுவே இலங்கையின் முதலாவது புகையிரத சேவை.

இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 147 வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது. தமது பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டே பிரித்தானியரால் 1865 ஆம் ஆண்டு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், காலப்போக்கில் அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப மனித தேவைகளும் அதிகரித்தமையினால் புகையிரத சேவை நாட்டின் பல பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டது.

கரடு முரடான, வளைவான பிரதேசங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் நவீன கண்டுபிடிப்புக்களின் வருகையைத் தொடர்ந்து புகையிரத சேவை புதிய பரிமாணங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து சுதந்திரத்துக்குப் பிற்பட்ட பல்வேறு காலகட்டங்களில் இலங்கையின் புகையிரதப் பாதைகள், புகையிரத நிலையங்கள் போன்றவை புனரமைக்கபட்டு நவீனமயப்படுத்தப்பட்ட போதும் இலங்கையில் புதிய புகையிரதப் பாதைகள் அமைக்கப்படவில்லை. பல தடவைகள் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் அது தோல்வியிலேயே முடிந்தது.

அந்தவகையில் இலங்கையில் 100 வருடங்களுக்குப் பிறகு அமைக்கப்படும் முதலாவது புகையிரதப் பாதையாக மாத்தறை கதிர்காமம் வரையிலான புகையிரதப் பாதை நீடிப்புத் திட்டம் விளங்குகின்றது. ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை புகையிரப் பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் அதன் கட்டுமானப் பணிகள் மாத்தறையிலிருந்து பிலதுவ (நாய்மடு) என்ற பிரதேசம் வரையிலான 2 கிலோமீ்ற்றர் மட்டுமே இடம்பெற்றன. அதுவும் ஒழுங்கான முறையில் பூர்த்தி செய்யப்படாமலே அத்திட்டம் கைவிடப்பட்டது.

அதன்பின்னர் 2006 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அடிக்கல் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரேமதாச காலத்தில் அமைக்கப்பட்ட 2 கிலோமீற்றர் தூரத்திலிருந்து புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கான ஆராய்ச்சிகளை கொரிய நிறுவனமொன்று மேற்கொண்டு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தது.

அதன்படி இலங்கை அரசாங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவை இணைந்து மாத்தறை – கதிர்காமம் வரையிலான புகையிரப் பாதையின் முதல் கட்டுமாணப் பணிகளை China National Machinery Imp & Corporation (CMC) என்ற சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தன.

இக்கட்டுமானப் பணிகள் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரை (27 கி.மீ), பெலியத்தவிலிருந்து அம்பாந்தோட்டை வரை (42 கி.மீ) , அம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரை (39.5 கி.மீ) வரை என மூன்று கட்டங்களான மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன்படி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி China National Machinery Imp & Corporation (CMC) நிறுவனம் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான முதல் கட்ட புகையிரதப்பாதை அமைப்பு வேலைகளை ஆரம்பித்தது.

இதன்போது கொரிய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட புகையிரப் பாதைகள் தொடர்பான வரைபடத்தில் புகையிரதப் பாதை செல்லும் இடங்கள் மக்களுடைய வயல் காணிகளாகவும், வீடுகளாகவும் இருந்தன. எனவே அவ்விடங்களிலிருந்து எப்படி காணிகளை பெற்றுக் கொள்வது என்பதில் ஆரம்பத்தில் சிக்கல்கள் உருவாகின அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மூலம் மக்களுடைய சொத்துக்களின் பெறுமதிகளுக்கேற்ப நஷ்டஈடு பணம் வழங்கப்பட்டு காணிகள் சுவீகரிக்கப்பட்டன.

உத்தேசிக்கப்பட்ட இத்திட்டத்தில் வளைவுகள் அற்ற இலகுவான டீசல் என்ஜினில் மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரதம் செல்லக்கூடிய வகையிலேயே பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதில் நவீன வசதிகள், சிறந்த சமிக்​​​ைஞ முறைகள், நவீன தொலைத்தொடர்பு முறைகள், Fiber optic cable மற்றும் ஒலிபரப்பு உபகரணங்கள் உள்ளடங்கியுள்ளன. Centralized Traffic Control (CTC) கட்டடம் மாத்தறைக்கும் பிலதுவ பிரதேசத்திற்கும் இடையில் கட்டப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப முறையில் புகையிரப் பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு 400 இற்கு மேற்பட்ட தொழில்நுட்ப இயந்திரங்கள், 1100 இற்கு மேற்பட்ட திறமையான தொழிலாளர்களுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வண்ணமுள்ளன.

மேலும் உத்தேசிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட கட்டுமானங்களும், நில்வள ஆற்றின் கடவை, நிலக்கீழ் புகையிரத கடவைகள் மிகப்பெரிய பாலங்கள், இரண்டு சுரங்கப் பாதைகள் ஆகியன மாத்தறையிலிருந்து பெலியத்த வரையிலான புகையிரப் பாதை அமைப்பு திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.

மேலும் நான்கு பிரதான புகையிரத நிலையங்களும் இரண்டு உபபுகையிரத நிலையங்களும் அதனுள் சுப்பர் மார்க்கட்டுகள், கடைகள், புகையிரத ஊழியர்களுக்கான தங்குமிட வசதிகள் போன்றனவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி வத்தேகம பாலம் (1.5 கி.மீ), நில்வள பாலம் (1.4 கி.மீ) என்பன இலங்கையின் மிக நீளமான இரண்டு புகையிரத பாலங்களாகவும், நாகெட்டிய சுரங்கப் பாதை இலங்கையின் மிக நீளமான புகையிரத சுரங்கப் பாதையாகவும் (615 மீற்றர் நீளம்), மிக உயரமான கொங்கிறீட் புகையிரத பாலமாக வெரலகொட பாலம் (15மீற்றர்) போன்றன அமையவுள்ளன.

இக்கட்டுமானப் பணிகளில் இலங்கையில் அதிக உயரமான கொங்கீறிட் புகையிரத பாலமாகக் கருதப்பட்ட வெரலகொட பாலத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வாண்டு யூன் மாதம் 17 ஆம் திகதி நிறைவுபெற்றது.

மேலும் நில்வள இரும்புப் புகையிரதப் பாலத்துக்கான இரும்பு வலயத்தின் நிர்மாணப் பணிகள், தண்டவாளத்தின் சுவர்களை தக்க வைக்கக்கூடிய இணைக்கட்டுமானப் பணிகள், வத்தேகம பாலத்துக்கான நிர்மாணப் பணிகள், மழை இல்லாத இரவு நேரங்களில் வெற்றிடங்களுக்கான மண் நிரப்புதல், வீதிகளின் மண் நிரப்பி வீதிகளை சமப்படுத்துதல் போன்ற நிர்மாண வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருவதுடன் இவற்றுக்கு அதிக மனிதவளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்ட இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட சவால்கள் தொடர்பாக CMC நிறுவனத்தின் ஆலோசகர் கூறுகையில்,

“புகையிரதப் பாதைகள் கிராமங்கள், வயல்வெளிகள் என்பவற்றின் ஊடாக அமைக்க திட்டமிடப்பட்டிருந்தமையால் அங்கிருந்த மக்களை மீள்குடியமர்த்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அடுத்தது இலங்கையில் சிறந்த புகையிரதப் பாதைகளை அமைக்கக்கூடிய பொறியியலாளர்கள் இன்மை, மாத்தறை பிரதேசத்தில் காணப்படும் மண்வகைகள் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுப்படுவதால் சிறிய மழை பெய்தாலும் வேலைகளை செய்ய முடியாமை போன்ற காரணங்களினாலும் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் அதிக பண விரயமும், கால விரயமும் ஏற்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வேலைகளை துரிதப்படுத்தி வருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.

இவை தவிர CMC நிறுவனம் வறிய பாடசாலைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை வழங்குதல், ஏனைய சிறுவீதிகளை புனரமைத்தல் போன்ற செயற்திட்டங்களையும் நன்கொடையின் அடிப்படையில் செய்துவருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் தெற்கு போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்தல், சுற்றுலாத்துறையினை மேலும் அபிவிருத்தி செய்தல் போன்ற அனுகூலங்களை இலங்கைக்குக் கிடைக்குமென இலங்கை போக்குவரத்துத் திணைக்களம் தெரிவிக்கின்றது. உத்தேசிக்கப்பட்ட இக்கட்டுமானப் பணிகள் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.