ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு இனிதே நிறைவு பெற்றிருக்கின்றது. பாலமுனையில் இடம்பெற்ற இந்த மாநாடு ‘வெற்றி’ என சிலர் சொல்கின்றார்கள்;. ஆனால் இது எந்த அடிப்படையில் வெற்றி என்பதுதான் விளங்குதில்லை.
ஜனாதிபதியும் பிரதமரும் அதிதிகளாக வருகைதந்ததும், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதும் ஒரு தேசிய நிகழ்வின் வெற்றிகளில் முக்கியமானவைதான். ஆனாலும் அவை மட்டுமே முழுமையான வெற்றியெனக் கூற முடியாது.
ஒரு திருமணம் என்றால், அழகான மணப்பந்தல் அமைப்பதும் நூற்றுக்கணக்கானோர் வருகைதருவதும் மாத்திரமே அதன் பிரதான நோக்கங்கள் அல்ல. மாறாக, அங்கே மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். அதுதான் முக்கியம்.
அதைவிட்டுவிட்டு, மணமகன் விலையுயர்ந்த கோட் போட்டிருக்கின்றார் என்பதற்காகவும் மணமகள் அதிகமான தங்க நகைகளை சுமந்து நிற்கின்றார் என்பதற்காகவும் மிகவும் வெற்றிகரமான திருமணம் என்று அதை சொல்லி விட முடியுமா?
அதுபோலவே, இலங்கை முஸ்லிம்களின் பிரதான கட்சியான மு.கா.வின் தேசிய மாநாடு கடுமையான எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பும் மாற்றத்திற்கு உள்ளாகப் போகின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வும் முன்வைக்கப்பட போகின்றது. இவ்வாறான ஒரு காலப்பகுதியில் ஒரு முஸ்லிம் கட்சியினால் நடாத்தப்படும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவமானதாக காணப்பட்டது.
இது சமூகத்தளத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. கொந்தராத்துக்காகவும், தொழில் பெற்றுக் கொள்வதற்காகவும், வேறு சுய லாபங்களுக்காகவும் அன்றி, உண்மைக்குண்மையான சமூக உணர்வுடன் கட்சியை நேசிக்கின்ற சிரேஷ்ட போராளிகள் இந்தக் கவலையுடனேயே மாநாட்டு மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள்.
மறுபுறத்தில், கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூதினதும் செயலாளர் (?) ஹசன்அலியினதும் நிலைப்பாடுகளை ஹக்கீமின் கூட்டத்தார் கடுமையாக விமர்சிப்பதற்கு தலைப்பட்டுள்ளனர். இதில் நூற்றுக்கு ஒருவீத நியாயம் இருந்தாலும், இது பெரும்பாலும், மு.கா. தலைமை இந்த மாநாட்டை சரியாக பயன்படுத்தத் தவறியதை மறைப்பதற்கான முயற்சிபோலவே தோன்றுகின்றது.
மு.கா. என்பது மக்களின் கட்சி என்ற அடிப்படையில் எல்லா மக்களும் மட்டுமன்றி ஹசனலி, பசீர் போன்ற அதிருப்தியாளர்களும் இம்மாநாட்டுக்கு போக வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு போகாமல் விட்டால், தேசியப்பட்டியல் வழங்காததன் காரணமாகவே அதாவது சுயநலத்திற்காகவே அவ்வாறு செயற்பட்டதாக சொல்லப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று அதுவே நடந்திருக்கின்றது. பசீர் முரண்பட்டிருப்பதும் ஹசனலி மாநாட்டுக்கு வராமல் விட்டதும் அற்பத்தனமான தேசியப்பட்டியல் ஆசைக்காக மட்டுந்தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த பகீரத பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநாட்டில் உரையாற்றிய ஹக்கீம், ‘குள்ளநரித்தனமான அரசியல்’ என்று கூறியது ஹசனலியினதும் பசீர் சேகுதாவூதினதும் அரசியலையே என்பது சிறுபிள்ளைக்கு கூட விளங்கும்.
அவர் மேலும் தனது உரையில், இரண்டு பேரை கட்சியை விட்டு விலக்கியுள்ளதாகவும் இன்னும் இருவரை இடைநிறுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இடைநிறுத்தப்பட்டவர்கள் தலைமைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய இரு மௌலவிகள் என்றும் இடைநிறுத்தப்படவுள்ளோர் தவிசாளரும் செயலாளரும் என்றும் கூறப்படுகின்றது.
அவ்வாறு தலைமையால் எடுத்த எடுப்பில் அவர்களை இடைநிறுத்த முடியாது என்று ஒரு வாதமும் இங்கு முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் இந்த உட்கட்சிப் பூசலின் தோற்றுவாய் என்பது தேசியப் பட்டியலுக்கும் அப்பாலானது என்பது கட்சியின் அரசியலோடு நெருங்கியவர்களுக்கு நன்றாக தெரியும். அதை இப்போது வாசகப் பெருமக்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கின்றது.
அதாவது, மு.கா. செயலாளர் ஹசனலி, தவிசாளர் பசீர் ஆகியோர் மட்டுமல்ல கட்சியிலுள்ள மேலும் பலரும் தலைவருடன் எப்போதும் சில விடயங்களில் முரண்பட்டு வந்திருக்கின்றனர். இது சகஜமானதும் கூட. ஆனால், எல்லாம் மூடிய கதவுகளுக்குள் நடந்ததாலும் வெளியில் அவர்கள் ஆளுக்காள் ஆரத்தழுவி கொண்டிருந்தமையாலும் இது மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
.இவ்வாறிருக்கையிலேயே ஹசனலிக்கும் பசீருக்கும் தேசியப்பட்டியல் தருவதாக ஹக்கீம் வாக்களித்தார். பின்பு தனது சகோதரனுக்கும் சகாவுக்கும் கொடுத்தார்.
தமக்கும் தராமல், கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும் கொடுக்காமல் தான்தோன்றித்தனமாக தலைமை நடந்து கொள்ள முற்பட்டமைதான் இப்போது ஏற்பட்டிருக்கின்ற எல்லா முரண்பாடுகளுக்கும் தோற்றுவாய் ஆகும். அதன் பிறகு, ஹசனலி, பசீர் ஆகியோருக்கும் கட்சித்தலைமைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் விழத்தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அடுத்த நகர்வை மேற்கொண்டார் ஹக்கீம். அதன்படி கண்டியில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் வைத்து, உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ காதரை நியமித்தார்.
இதன்படி பொதுச் செயலாளராக இருந்த ஹசனலின் கீழிருந்த சில அதிகாரங்களை மன்சூரிடம் சூசகமாக கைமாற்றினார் ஹக்கீம். இந்த இடத்தில்தான் ஹசனலிக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான பனிப்போர் தொடங்கியது. பசீரின் தவிசாளர் பதவியில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லையாயினும் தலைவரின் தான்தோன்றித்தனத்தனமான போக்கு தொடர்பில் பசீர் அதிருப்தியுற்று விலகி இருந்தார்.
இதற்கிடையில் இன்னுமொரு காய் நகர்த்தப்பட்டதாக அதிருப்தியாளர்கள் தரப்பிலிருந்து நம்பகமாக தெரியவருகின்றது. அதாவது, உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ. காதருக்கு கட்சியின் செயலாளரான ஹசனலியின் அதிகாரங்களை தாரைவார்க்கும் விதத்திலமைந்த கடிதமொன்றை மு.கா. தலைவர் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது.
இதன்பின்னர், தேர்தல் ஆணையாளரின் அழைப்பில் ஹசனலி தேர்தல் செயலகத்திற்கு சென்ற போதே இவ்வாறான விடயங்கள் எல்லாம் இரகசியமாக இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்தே, ஹசனலி தீவிர செயற்பாடுகளில் இறங்கியுள்ளார் என்று கருத இடமுண்டு.
இவ்வாறிருக்கையில், தேசிய மாநாடு இடம்பெறவுள்ள நிலையில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஹக்கீம் ஒரு முயற்சியை மேற்கொண்டார்.
இதைப் பாராட்ட வேண்டும். அவர் ஹசனலியை சந்திக்க ஏற்பாடு செய்தார். அங்கு ஹசனலி தனக்கு நடந்த அநியாயங்களை தலைவர் ஹக்கீமுக்கு எடுத்துச் சொன்னார். இதையெல்லாம் செவிமடுத்த தலைவர், உடனடியாக மன்சூரிடமிருந்து தங்களது அதிகாரங்களை பெற்று, மீள ஒப்படைப்பதாக கூறியுள்ளார். தேசிய மாநாட்டு முன்னர் இதைச் செய்வதாக ஹக்கீம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அதன் காரணமாக மாநாட்டுக்கு வரவில்லை
என்றும், அதிகாரம் எதுவுமின்றி மாநாட்டு மேடையில் ஏற தனக்கு மனமில்லை என்று அவர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதுதான் நடந்துள்ளது. ஆக. தேசியப்பட்டியல் விடயம் மட்டுமே இதற்கு காரணமல்ல. அதற்கு முன்னும் பின்னும் பல காரணங்கள் உள்ளன. ஆனால் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஹசனலியோ பசீரோ ஒழுங்காக வாயைத் திறந்து சரியாக விளக்கமளிக்காத காரணத்தினாலேயே தேவையற்ற குழப்பங்களும் ஊகங்களும் வெளியாகியுள்ளன. ஒன்று, எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கூனிக் குறுகி இருக்க வேண்டும் அல்லது மக்களிடத்தில் வெளிப்படையாக பேசி, தீர்ப்பை அவர்களிடத்தில் விட்டுவிட வேண்டும்.
எவ்வாறிருப்பினும், மு.கா. மாநாட்டுக்கு ஹசனலி வந்திருக்கவே வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. மனசை மனசாக்கிக் கொண்டு என்ன நோக்கத்திற்காகவோ பசீர் சேகுதாவூத் வந்திருந்தார். ஆனால், என்ன நடந்தது? பகிரங்க மேடையில் பசீரை மறைமுகமாக குறிக்கும் விதத்தில் மோசமான வார்த்தைகளை பேசியதன் மூலம் மு.கா. தலைவர் தனது வெஞ்சத்தை தீர்த்துக் கொண்டார். இதை வைத்துப் பார்க்கின்ற போது ஹசனலி எடுத்த முடிவு சரி என்று தோன்றுகின்றது.
ஹக்கீமின் இப் பேச்சு, ஹசனலிக்கும் பசீருக்கும் எதிரானது மட்டுமல்ல, தலைமையை உள்ளும் புறமும் விமர்சித்துக் கொண்டிருக்கின்ற எல்லா உறுப்பினர்களுக்கும் பொதுவானதாகும். பசீரை அவமானப்படுத்தியதன் மூலம், அதிருப்தியாளர்கள், மனம் திருந்தி மீண்டும் கட்சிக்குள் வருவதற்காக கதவுகளை இறுக்க மூடியுள்ளார் றவூப் ஹக்கீம்.
ஆனால், ஹக்கீமின் பலவீனங்கள் என்னவென்று ஹசனலிக்கும் பசீர் போன்றோருக்கும் தெரியும் அவர்களின் பலம் என்னவென்றும் மு.கா. தலைவருக்கு தெரியும். எவ்வாறாயினும், மு.கா. தலைவரும், ஹசனலியும், பசீரும் மற்றையவர்களும் அரசியல்வாதிகளே. இன்று அடித்துக் கொள்வார்கள் நாளை தழுவிக் கொள்வார்கள். எனவே மக்கள் யாருக்காகவும் யாருடனும் முரண்படத் தேவையில்லை. நியாயத்தின் பக்கம் மௌனமாக நின்றாலே போதுமானது.

Post a Comment