-மாகாண அமைச்சர் நசீர் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் சகல துறைகளிலும் வரலாற்றுச் சாதனை படைத்த மாணவ மாணவிகளையும், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களையும், வழிகாட்டிய அதிபர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று அல்-ஹம்றா விளையாட்டு மைதான வளாகத்தில் இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.சரீப்டீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சாதனையாளர்களைக் கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ்.அப்துல் ஜலீல், ஏ.எல்.எம்.ஹாசீம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் உள்ளிட்ட உயரதிகாரிகள், உள்ளுர் அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் வரலாற்றுச் சாதனை புரிந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, கடந்த காலங்களில் கல்லூரியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டுழைத்த அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலைக்கத் தேவையான 'மல்டி மீடியா புறஜக்டர்' உபகரணங்களும் மாகாண சுகாதார அமைச்சர் நசீர் அவர்களால் கல்லூரி அதிபர் எம்.சரீப்டீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் உரை நிகழ்த்துகையில் 'இப்பாடசாலையின் அபிவிருத்தியில் நான் எப்போதும் கண்ணுங் கருத்துமாக இருப்பேன். இது ஒலுவில் பாடசாலையில்லை. இது என்னுடைய பாடசாலை. இங்குள்ளவர்கள் என்னுடைய பிள்ளைகள் என்றுதான் நான் சிந்திக்கின்றேன். செயற்படுகின்றேன்' எனத் தெரிவித்தார்.
வரலாற்றுச் சாதனை புரிந்த முன்னாள் அதிபர் எம்.எம்.றகீம் அவர்களுக்கும் ஒலுவில் அல்-ஹம்றாவில் பாராட்டு.
முன்னாள் அதிபர் எம்.எம்.றகீம் அவர்களின் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய சேவைக் காலம் ஒரு பொற்காலமென வர்னிக்கப்படுகிறது.
இவர் தனது சேவைக் காலத்தில் தொண்டர் ஆசிரியர் சேவையை உருவாக்கினார். அதன் பிற்பாடு அவர்களுககு நிரந்தர நியமனத்தைப் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் அல்-ஹம்றாவின் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்பட்டது.
இன்னும் அப்போதிருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும்;, அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்றபுடன் கொண்டிருந்த தோழமை காரணமாக பல கோடி ரூபாய்கள் செலவில் ஆராதனை மண்டபம், மூன்று மாடிக் கட்டிடம் போன்றவற்றைப் பெற்றுக் கொடுத்தார்.
மேலும் பரீட்சைப் பெறுபேறுகள் சிறப்பாய் அமைய உதவியதோடு, அகில இலங்கை ரீதியில் பல்துறைகளிலும் மாணவர்கள் சாதனை புரிய காரணமானவர்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அக்கரை காட்டிய அதிபர் றகீம் ஆசிரியர் நலன்களைப் பேணியதோடு, பாடசாலைக்கும் சமூகத்திற்குமிடையிலான நல்லுறவைப் பேணினார். இதனால் பாடசாலையின் ஒரு பொற்காலமாக இக்காலம் கருதப்படுகிறது.
இவைகளை நினைவு கூர்ந்து முன்னாள் அதிபர் எம்.எம்.றகீம் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் சார்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் அதிபர்களான எம்.எம்.முகைடீன், ஏ.மீராமுகைதீன், ஏ.எல்.எம்.முஸ்தபா, யூ.எல்.ஏ.முபாறக், ஏ.ஆதம்பாவா,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.அப்துல் ஜலீல், பிரதியமைச்சர் முஹம்மட் தம்பி ஆகியோரும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment